வெளியிடப்பட்ட நேரம்: 03:02 (05/09/2018)

கடைசி தொடர்பு:07:07 (05/09/2018)

`பதில்கள் அனைத்தும் சரியான கேள்விகளுக்காக காத்திருக்கின்றன' - மயில்சாமி அண்ணாதுரை!

இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையுடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 

மயில்சாமி அண்ணாதுரை

விழாவில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ``ஆங்கிலேயர் காலத்தில் அவர்களுக்கு நம் ஆட்கள் எழுத்தர்களாக மட்டும் உதவினால் போதுமென ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள். அதனால்தான் இங்கு அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அப்போது ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், தற்போதைய காலத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக பெருக்கெடுத்துள்ளன.
அறிவியல் தளத்தை நோக்கி நாம் பலமாக நகர வேண்டியிருக்கிறது. தமிழகப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் புதிய தளங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. 

இன்றைய நாகரிக வளர்ச்சிக்கு அறிவியலும், அது ஏற்படுத்திய தொழில்நுட்பமும்தான் முதன்மையான காரணமாக இருக்கிறது. அறிவியலின் அடித்தளமே புதியதாக கேள்வி கேட்பதுதான். இங்கு பதில்கள் அனைத்தும் சரியான கேள்விக்காகவே காத்துக்கொண்டிருக்கின்றன. சரியான கேள்விகளால் அறிவியலை மட்டுமல்ல, வாழ்க்கைத் தரத்தைக்கூட மாற்ற முடியும். 

பறவைபோல பறக்க முயற்சி செய்தவர்கள் எவராலும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் பறப்பது எப்படி? என்ற சரியான கேள்வியைக் கேட்டு, அதற்கான ஆராய்ச்சியை செய்த ரைட் சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். அதாவது பறவைபோல பறக்காமல், எப்படி பறக்கலாம் என கேள்வி எழுப்பியதன் விளைவுதான் ரைட் சகோதரர்களின் வெற்றிக்கு வித்திட்டது. அதேபோல மங்கள்யான் செயற்கைக்கோள் சோதனையில் அமெரிக்கா 5 முறை முயற்சி செய்தும், ரஷ்யா 9 முறை முயற்சி செய்த பிறகும்தான் இறுதியாக வெற்றிபெற்றார்கள். ஆனால், அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏன் தோற்றார்கள் என்ற சரியான கேள்வியை நாம் எழுப்பிப் பார்த்தோம். அதன்விளைவுதான் மங்கள்யான் சோதனையின் முதல் முயற்சியிலேயே இந்தியா வெற்றிபெற காரணமானது.

சரியான கேள்விகளால் மட்டும்தான், அறிவியலில் சரியான பதில்களைக் கண்டறிய முடியும். சரியான கேள்விகள்தான் சரியான கண்டுபிடிப்புகளுக்கும் வித்திடும். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வதற்கான முதல்படியே, சரியான கேள்விகளைத் தைரியமாக கேட்பதுதான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.