வெளியிடப்பட்ட நேரம்: 03:50 (05/09/2018)

கடைசி தொடர்பு:07:10 (05/09/2018)

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியைக்குப் பிரதமர் பாராட்டு!

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியை ஸதிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - ஆசிரியை ஸதி

ஆண்டுதோறும் செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக கொண்டாப்படுகிறது. அதையொட்டி, ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கௌரவப்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு மாநிலங்கள் வாரியாக விருது வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்துவிட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் `தேசிய நல்லாசிரியர் விருது' பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். 

திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும், `குட்டி கமாண்டோ' திட்டம் போன்றவற்றின் மூலம் எண்ணற்ற மாற்றங்களைத் தனது முயற்சியால் பள்ளியில் மாற்றிக்காட்டியுள்ளார் தலைமை ஆசிரியை ஸதி. கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்ற இவருக்குத் தேசிய நல்லாசிரியர் விருது கிட்டியுள்ளது. பலரும் இவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் தெரிவித்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த விழாவில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதன்பிறகு தலைமை ஆசிரியை ஸதி குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ``தலைமையாசிரியை ஸதி பல்வேறு சமூக நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளார். இவரின் பல்வேறு முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றியுள்ளார். மேலும், கல்வி சாராத  நடவடிக்கைகளிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க