வெளியிடப்பட்ட நேரம்: 04:56 (05/09/2018)

கடைசி தொடர்பு:11:05 (13/09/2018)

``ஆடு, மாடு, குழந்தைகளை சின்னத்தம்பி தாக்கமாட்டான்!” - யானைக்காக நெகிழும் மக்கள்

அதோட இடத்துக்கு வந்துட்டு, அவங்களயே இருக்கக் கூடாதுன்னு சொல்றது நியாயமே இல்ல

``ஆடு, மாடு, குழந்தைகளை சின்னத்தம்பி தாக்கமாட்டான்!” - யானைக்காக நெகிழும் மக்கள்

சோலைக் காடுகள் குறைந்து, கட்டடக் காடுகள் பெருகியுள்ள புதிய இந்தியா இது. அதனால்தான், மனித -விலங்கு மோதல்களுக்கு இங்கு பஞ்சமில்லை. அரசாங்க நிலம், யானை வழிப்பாதை, வனப்பகுதி என எங்கும் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளே அதிகம். முன்பு வனவிலங்குகள் இருந்த பகுதிகள் தற்போது கட்டடங்களாகவும் விவசாய நிலங்களாகவும் மாறியுள்ளன. வழக்கம் போல உணவைத் தேடி அங்கு வரும் வன விலங்குகளை ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்வதாக பழி சுமத்துகிறோம். அப்படித்தான், கோவை அருகே ஒரு காட்டு யானைக்கு எதிராக ஊர் மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி

கோவை நகரின் இரைச்சல்கள் குறைந்து, இயற்கைப் போர்வையில் மூடி மறைந்து காணப்படும் பகுதிதான் ஆனைக்கட்டி. நீலகிரியின் உயிர்ச்சூழல் மண்டலத்தில், கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரே பகுதி ஆனைக்கட்டிதான். அதன் தாக்கத்தை, மாங்கரை தடாகம், சின்னத்தடாகம் என்று இந்தப் பகுதியை ஒட்டியுள்ள  பகுதிகளிலும் காணலாம். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை அங்கு அடிக்கடி காணலாம். பழங்குடி மக்கள் அதிகம் உள்ள அந்தப் பகுதியில், கடந்த 40 ஆண்டுகளாக பிற மனிதர்களும் குடியேறி வருகின்றனர்.

விவசாயம், செங்கல் சூளைகள் வேலைகளில் இங்கிருப்பவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அவ்வப்போது வரும் யானைகளுக்கு அந்த மக்கள் பெயர் சூட்டுவது வழக்கம். பேய், விநாயகன், கொம்பன், சின்னத்தம்பி, பெரியதம்பி என்று ஏராளமான பெயர்களை வைத்துள்ளனர். இதில், 15-20 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி யானைதான் மிகவும் பிரபலம். ஆரம்பத்தில் பெரியதம்பியுடன் சுற்றிவந்த சின்னத்தம்பி, தற்போது தனிக்காட்டு ராஜாவாகச் சுற்றி வருகிறார். பார்க்கக் கம்பீரமான தோற்றமாக இருந்தாலும், இதுவரை ஒருவரைக் கூட சின்னத்தம்பி தாக்கியதில்லை. ஆனால், உணவுக்காக விவசாய நிலம், வீடுகள் என்று அனைத்து இடங்களிலும் நுழைந்துவிடுவார். இதனால், சின்னத்தம்பியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த ஊர்களில் ஒரு பகுதியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

``மத்த யானைங்க எப்பவாது குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன. சின்னத்தம்பி எப்பவாதுதான் காட்டுக்கு போறான். தினமும் 50, 60 வாழைகள சேதப்படுத்திருது. நிறைய வீடுங்கள் இதனால சேதமடைஞ்சுருக்கு. கடன் வாங்கி விவசாயம் பண்றோம். அதுவும் இப்படியானா, நாங்க என்னத்தான் பண்றது? அதனால, சின்னத்தம்பிய வேற இடத்துக்கு மாத்தணும். அதுவரை நாங்க போராட்டம் நடத்துவோம்" என்று சின்னத்தம்பிக்கு எதிராக சில விவசாயிகள் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி யானை முதலில் தடாகம், மாங்கரை போன்ற பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், சின்னதம்பி  யானையைப் பார்க்கும்போதெல்லாம், சிலர் கற்களால் தாக்கி வந்தனர். அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த சின்னத்தம்பியை, சில மனிதர்கள் கற்களால் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, கொண்டனூர், கண்டிவழி போன்ற மலைக் கிராமங்களின் அருகே சின்னதம்பி சுற்றி வருகிறது. அங்கும், சின்னத்தம்பியை சிலர் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அண்மையில், ஆனைக்கட்டி அருகே சின்னத்தம்பி வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக்கின் ஊழியர்கள் கற்கள், பாட்டில்கள், தீப்பந்துகள் மூலம் சின்னத்தம்பியைக் குரூரமாகத் தாக்கினர். 

``ஆனைக்கட்டி பகுதியைச் சுத்தி 3, 4 உருப்படிங்க உலா வரும். ஆனா, எந்த யானை வந்தாலும் அது சின்னத்தம்பிதான்னு சிலர் அது மேல பழிசுமத்தறாங்க. இங்க இருக்கற பழங்குடி மக்கள் யாருமே அத எதிர்க்கல. பஞ்சம் பொழைக்க வந்தவங்கத்தான் சின்னத்தம்பிய எதிர்க்கறாங்க. அதோட இடத்துக்கு வந்துட்டு, அவங்களயே இருக்கக் கூடாதுன்னு சொல்றது நியாயமே இல்ல" என்கின்றனர் சில உள்ளூர் வாசிகள்.

சின்னத்தம்பி யானை

நட்ராஜ்``அது ரொம்பவே பொறுமையான யானை. நான் 30 வருஷத்துக்கு மேல இங்க விவசாயம் பண்றேன். என் தோட்டத்துல கூட அதனால சேதம் நடந்துருக்கு. ஆனா, அது உணவுக்காகத்தான் வருது. அது நினைச்சா, ஒரு நாளுக்கு 50 மனுஷங்கள அடிக்க முடியும். இப்பவரை ஒரு மனுஷன் மேல கூட அது கை வெச்சதில்ல. சில நாள்களுக்கு முன்னாடி, எங்க தோட்டத்துக்குப் பக்கத்துல சின்னத்தம்பி வந்துச்சு. பக்கத்துல குழந்தைங்க நின்னுட்டு இருந்தாங்க. எல்லாரும் பதறிப் போனப்ப, சின்னத்தம்பி குழந்தைங்களப் பார்த்துட்டு, வேற வழியா சுத்திப் போய்டுச்சு. நான் எவ்வளவோ யானைங்கள பார்த்துருக்கேன். சின்னத்தம்பி ரொம்பவே அமைதி. ஆனா, அது முன்ன மாதிரி இல்ல. இப்ப அதோட உருவமே மாறிடுச்சு. மனுஷங்க அடிக்கறதால அது சரியா சாப்டறது இல்லனு நினைக்கறேன்" என்கிறார் விவசாயி நட்ராஜ்.

கரட்டி``காட்டுக்கு மட்டும் இல்ல, உலகத்துக்கே அதுதான் ராஜா. நம்ம எல்லாம் ராஜா இல்ல. எந்த விஷயமா இருந்தாலும், பூ, பொட்டு வெச்சு நம்ம முதல்ல விநாயகரத்தான் கும்படறோம். ஒரு ஜான் வயிறு இருக்கற மனுஷங்களே, தக்காளி, வெங்காயம், மிளகாய்னு நல்ல ருசியா எண்ணெய்ல வறுத்து சாப்டறோம். அதுக்கு 6 ஜான் வயிறு. அப்ப அது சாப்ட வேண்டாமா? அவர் இங்க வர்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அதை எதிர்த்துக் கேட்க மனுஷங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. சின்னத்தம்பி ரொம்ப நல்லவரு. இங்க இருக்கற ஆடு, மாடுங்கள கூட அவர் ஒண்ணும் பண்ண மாட்டாரு. கடவுளே போ சாமின்னு சொன்னா.. அமைதியா போய்டுவார். சாப்பாடு தேடி வருவார். சாப்டுவார். அப்படியே காட்டுக்குப் போய்டுவார். அவரால இங்க யாருக்கும் பிரச்னை இல்ல. இங்க இருக்கறவங்கனாலத்தான் அவருக்குப் பிரச்னை. அவரு இருக்கறதால, காட்டுலயும் வீட்லயும் நிறைய பேருக்கு தப்புப் பண்ணக் கூடாதுன்னு பயம் இருக்கு" என்று முடித்தார் கரட்டி என்ற பழங்குடி.

சின்னத்தம்பி

``அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலிடத்திலிருந்து சிக்னல் வந்தவுடன் சின்னத்தம்பியை வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள். சின்னத்தம்பிய அடிச்ச, டாஸ்மாக் கடைக்காரங்கள கண்டிச்சுருக்கோம். இனி இப்படி நடக்காதுன்னு சொல்லிருக்காங்க" என்று சின்னதம்பியைத் தொடர்ந்து கண்காணித்துவரும் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், கோவை மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் இதை மறுக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, ``ஆனைக்கட்டில சின்னத்தம்பி யானைய யாரும் அடிக்கல. அது வேற ஒரு யானை. அத டாஸ்மாக்காரங்க அடிச்சதா சொன்னாங்க. நாங்க விசாரணை பண்ணிட்டோம். டாஸ்மாக் கடைக்காரங்க யானைய அடிக்கல. அங்கிருக்கற தோட்டத்துக்குள்ள ஒரு யானை போக பார்த்துச்சு. அத அவங்க முடுக்கி விட்டாங்க. சின்னத்தம்பியத் தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருக்கோம். மத்தபடி, அதை வேறு இடத்துக்கு மாற்ற யாரும் பரிந்துரை செய்யலை" என்றார்.

சின்னத்தம்பி குறித்து வனத்துறையிலேயே, கீழ்மட்ட பணியாளர்கள் ஒரு மாதிரியும், மேல் மட்ட அதிகாரிகள் வேறு மாதிரியும் சொல்வது பயத்தை அதிகரிக்கிறது. யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்களுக்கு சீல் வைக்கத் தொடங்கியுள்ளோம். அது வசிக்கும் இடத்தில் இருந்துகொண்டே, அதற்குத் தொந்தரவு கொடுக்கும் மனிதர்களைத் தண்டிப்பது யார்?


டிரெண்டிங் @ விகடன்