வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (05/09/2018)

கடைசி தொடர்பு:09:09 (05/09/2018)

``அரசு அங்கீகரிக்காமல், சமூகம் எப்படி அங்கீகரிக்கும்?"- பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வேதனை

``அரசு அங்கீகரிக்காமல், சமூகம் எப்படி அங்கீகரிக்கும்?

ன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் வழக்கம்போல கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர். ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும், ஆசிரியர்களின் பெருமைகளையும் அனைத்துப் பள்ளிகளும் அச்சுப் பிசகாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், அன்றைய தினம் ஊடகங்களில் செய்தியாவார்கள். ஆனால், இவை எதிலுமே இடம்பெற முடியாமல், 'நல்லாசிரியர்' விருதில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்.

பள்ளி

தினம் தினம் போராடிப் போராடிப் பல்வேறுகட்ட முயற்சிகளுக்குப் பிறகு பணிக்கு வரும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்த பிறகும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.

தென்னியப்பன் ஆசிரியர்

``சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுத்தான் படிச்சு முடிச்சேன். இதையடுத்து, 8 வருஷ முயற்சிக்குப் பிறகுதான் வேலைக்கு வந்தேன். என்னுடைய வேலையில் நான் முழு திருப்தியடைந்தேன். என்னுடைய தலைமை ஆசிரியர்களும் என்னைப் பாராட்டினார்கள். சில நண்பர்கள் எனக்கு 'நல்லாசிரியர் விருது' வழங்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், நல்லாசிரியர் விருதுக்கு நிறைய ஆவணங்கள் கேட்கிறார்கள். மற்றவர்களைப் போல, வெளியில் சென்று சமூகப் பணி செய்வது எங்களுக்கு மிகவும் சவாலான ஒன்று. நல்லாசிரியர் விருதுக்கு, பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கான விதிகளைத் தளர்த்த வேண்டும். எங்களை, மற்ற ஆசிரியர்களுடன் ஒப்பிடாமல், தனிப்பிரிவில் வைத்து விருது வழங்க வேண்டும். ஆசிரியர்களைக் கௌரவிக்க வேண்டியது அரசின் கடமை. அதைக் காசு கொடுத்து வாங்க வேண்டியது என்பது அவசியமில்லை" என்கிறார் 23 ஆண்டுகளாகத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கோவையைச் சேர்ந்த சென்னியப்பன்.

``கல்விமுறை மாற்றங்களில் ஆசிரியர்கள் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளி கந்தசாமிஆசிரியர்களுக்குச் சவால்கள் சற்று அதிகம். மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதை சமாளிப்பது அவரவரின் திறமை. ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர் சரியாக அமையவில்லை என்றால், அங்கிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கடினம். 50 சதவிகித பள்ளிகளில், பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மீது பணிகள் திணிக்கப்படுகின்றன. பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்குச் சில பணிகளைத் தளர்த்த வேண்டும். எனது நண்பர் ஒருவர், தேர்வு அறையில் கண்காணிப்பு பணியை கவனிக்க முடியாவிடினும், மற்றப் பணிகளை இழுத்துப்போட்டுச் செய்து அதை சமன்படுத்திவிடுவார். வாங்கும் சம்பளத்துக்கு சரியாகத்தான் பணி செய்துகொண்டிருக்கிறோம். பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று சில ஆசிரியர்களுக்கே கற்றுத்தரவேண்டிய சூழ்நிலைதான் இங்கு நிலவுகிறது" என்று ஆதங்கப்படுகிறார், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் கந்தசாமி.

மனோகரன்தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் மனோகரன், ``நல்லாசிரியர் விருது வாங்கியுள்ள அனைவருக்கும் எங்களது அமைப்பின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் பல நூற்றுக்கணக்கான பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவற்றில், பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களின் பணிகுறித்து அரசுக்குப் போதிய புரிதல் இல்லை. அதைப் புரிந்துகொள்ள அரசு முயற்சி செய்ததாகவும் தெரியவில்லை. அரசுப் பாடத்திட்டத்தை தயார்படுத்தும் ஆசிரியர் குழுவில் கூட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குக் கூட விருது வழங்கப்படவில்லை. தற்போது, மாநிலத்தில் இருந்து ஒருவருக்குத்தான் விருது வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்பை மேலும் குறைக்கும். முக்கியமாக, நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதே சரியாக இருக்குமா? என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. அந்த முறையை அரசு மாற்ற வேண்டும். நல்லாசிரியர் மட்டும் அல்ல. அனைத்து விருதுகளிலுமே, பார்வை மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். அரசே எங்களுக்கு அங்கீகாரம் வழங்காவிடின், சமூகம் எங்களை எப்படி அங்கீகரிக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.

சதாசிவம்

``அரசு வேலைவாய்ப்புகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளைவிட, ஆசிரியர் துறையில்தான் எங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகூட எப்போதாவது விருது அளிக்கும். ஆனால், தேசிய அளவில் எங்களைக் கண்டுகொள்வதேயில்லை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி, பார்வை மாற்றுத்திறனாளிகளைக் கண்காணிக்க குழு அமைத்து, நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். நாங்கள் தாயாக மதிப்பது அரசு நிர்வாகத்தைத்தான். அப்படிப்படி நிர்வாகமே எங்களை பாராட்டாவிடின், மற்றவர்கள் எப்படி எங்களைப் பாராட்டுவார்கள் என்பதுதான். நல்லாசிரியர்களுக்கு, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விருது வழங்குகின்றன. அவர்களாவது எங்களை அங்கீகரித்தால், அது அரசின் கவனத்தை ஈர்க்க வழிவகை செய்யும். மிகவும் சிரமப்பட்டுத்தான் நாங்கள் பணிக்கு வருகிறோம். 60 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளிகள் வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள்தான். அவர்களை அரசு அங்கீகரித்தால் எங்களுக்கு அது ஊக்கமாக இருக்கும்" என்கிறார் தேசிய பார்வையற்றோர் இணையத்தின் ஒருங்கிணைப்பாளர் சதாசிவம்.

பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மட்டுமல்ல, பல இடங்களில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்குமே அரசு முறையான அங்கீகாரம் வழங்குவதில்லை என்ற வேதனைக் குரல்கள் எங்கும் ஒலிக்கின்றன. ``எழுத்தறிவித்தவன் இறைவன்" என்று முதுமொழி ஆசிரியர்களுக்காகச் சொல்லப்படுவது வழக்கம். அப்படிப்பட்ட இறைவனை கௌரவிப்பது அரசின் கடமை.


டிரெண்டிங் @ விகடன்