வெளியிடப்பட்ட நேரம்: 06:02 (05/09/2018)

கடைசி தொடர்பு:07:25 (05/09/2018)

திருமுல்லைவாயில் காப்பகத்தில் சிறுமி உடல் புதைப்பு? - மாணவன் பகீர் வாக்குமூலம்

திருமுல்லைவாயிலில் பாலியல் புகாரினால் இழுத்து மூடப்பட்ட சிறுவர் காப்பகத்தில் சிறுமி உடல் புதைக்கப்பட்டுள்ளது என மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுவன் கொடுத்த பகீர் வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருமுல்லைவாயில் காப்பகம்

திருமுல்லைவாயிலில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த இல்லம் இழுத்து மூடப்பட்டது. விமலா ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த அந்த சிறுவர் இல்லத்தில் காப்பாளர்களாக வேலைபார்த்து வந்த பாஸ்கர், முத்து மற்றும் சாமுவேல் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி இயங்கி வந்த அந்த சிறுவர் இல்லத்தில் இருந்து 48 ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்களிடம் மாவட்ட கோர்ட்டு மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். விசாரணையில் அனைத்து சிறுவர் சிறுமிகளும் ரகசியமாக வாக்குமூலம் அளித்தனர்.

அந்த இல்லத்தில் சிறுமி ஒருவர் இறந்துவிட்டதாகவும் அந்த சிறுமியின் உடலை அங்கேயே  புதைக்கப்பட்டுள்ளதாக ஒரு சிறுவன் வாக்குமூலம் அளித்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று ஆவடியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் இணை ஆணையர் விஜயக்குமாரி தலைமையில் ஆய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் இராதாகிருஷ்ணன், மகளிர் ஆய்வாளர் ஷோபாராணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், சிறுவர்களிடம் நடத்திய ரகசிய வாக்குமூலத்தில் ஒவ்வொருவரும் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்துள்ளதால் குழப்பத்தில் உள்ளதாகத் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். மேற்படி சிறுவர் இல்லத்தில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதா? சிறுவர்கள் கூறிய வாக்குமூலம் உண்மையானதா என்பது சிறுவர் இல்லத்தில் உள்ள சர்ச்சைக்குரிய அந்த இடத்தைத் தோண்டினால் தெரியவரும்.