குட்கா ஊழல் - அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், ஜார்ஜ், ரமணா வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை! | gutka case - cbi raids vijayabaskar and former police commissioner george home

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (05/09/2018)

கடைசி தொடர்பு:11:21 (05/09/2018)

குட்கா ஊழல் - அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், ஜார்ஜ், ரமணா வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை!

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 40 இடங்களில் இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. 

விஜயபாஸ்கர் மற்றும் ஜார்ஜ்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டு வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்துள்ளது. 

 டி.ஜி.பி ராஜேந்திரன்

இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி  உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நாெளம்பூர் பகுதியில் உள்ள டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 40 இடங்களில் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள்  சோதனையை மேற்கொண்டுள்ளனர்.