வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (05/09/2018)

கடைசி தொடர்பு:17:15 (06/09/2018)

செல்போன்களைப் பறிக்க ஆட்டோவில் வந்த கும்பல்! - திகைத்துப்போன இன்ஜினீயரிங் மாணவன்

செல்போன் பறித்த கும்பல்

சென்னை திரு.வி.க நகரில் நடந்து சென்ற வாலிபரிடம் இருந்து இரண்டு செல்போன்களை ஆட்டோவில் வந்த கும்பல் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, குமரன்நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்து வரும் இவர், கடந்த 3-ம் தேதி திரு.வி.க. நகரில் உள்ள வெற்றிநகர், வரதராஜன் தெரு சந்திப்பில் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அவரின் மற்றொரு கையில் இன்னொரு செல்போன் இருந்தது. இந்தச் சமயத்தில் அவ்வழியாக ஆட்டோவில் வந்த கும்பல், ஸ்ரீதரிடமிருந்து செல்போனை பறித்தது. அவர், ஆட்டோவிலிருந்து இறங்கிய இரண்டு பேர்களுடன் போராடினார். அப்போது ஸ்ரீதரை அந்த இரண்டு பேர் சரமாரியாகத் தாக்கிவிட்டு செல்போன்களைப் பறித்துச் சென்றனர். 

இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீதரின் தாயார் பூர்ணிமா புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், காவலர் சண்முகம் ஆகியோர் செல்போனைப் பறித்த ஆட்டோ கும்பலைத் தேடினர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்வையிட்டனர். அப்போது, தேவராஜ் என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் செல்போன் பறிக்கும் காட்சி தெளிவாகப் பதிவாகியிருந்தது.

உதவி கமிஷனர் அரிகுமார்

இதையடுத்து, ஆட்டோ நம்பரை வைத்து செல்போன் திருடர்களை போலீஸார் தேடினர். அப்போது, திரு.வி.க. நகர் மயானப்பகுதியில் ஆட்டோ ஒன்று நிற்கும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார் அந்த ஆட்டோவை பறிமுதல் செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்தனர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், மணிகண்டன், அஜித்குமார், அப்பாஸ், கார்த்திக், திவாகரன் என தெரியவந்தது. உடனடியாக அவர்களிடமிருந்த செல்போன்களையும் போலீஸார் மீட்டனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திரு.வி.க. நகர் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும்படி அறிவுறுத்தினோம். அதன்பேரில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவராஜ், வீட்டுக்குள் வைத்திருந்த கேமராவை தெருவில் வைத்துள்ளார். அந்தக் கேமரா மூலம்தான் செல்போன் பறிப்பு சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. இதனால் தேவராஜியின் வீட்டுக்கு துணை கமிஷனர் சாய்சரன் தேஸ்வி, உதவி கமிஷனர் அரிக்குமார் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு வெகுமதி அளித்தனர். 
தொடர்ந்து, சிசிடிவி கேமராவில் ஸ்ரீதரை அஜித்குமார், திவாகரன் ஆகியோர் தாக்குவது தெளிவாகத் தெரிந்தது. அவர்களைப் பிடிக்க முயன்றபோது இருவரும் தவறி விழுந்ததில் கை, கால்கள் உடைந்தன. இந்தச் சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், காவலர் சண்முகம் ஆகியோரை போலீஸ: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டினார்" என்றனர்.