வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (05/09/2018)

கடைசி தொடர்பு:07:02 (06/09/2018)

‘அவருக்கு அப்பா வயசு’ - எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், நீதிபதியிடம் கண்ணீர்!

பவானிசாகர் எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் சந்தியா மாயமான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தோழி வீட்டில் தங்கியிருந்த சந்தியாவை போலீஸார் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

சந்தியா

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஈஸ்வரனுக்கும், பவானிசாகர் உக்கரம் ஊராட்சி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருகின்ற செப்டம்பர் 12-ம் தேதி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் பலமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி மதியம் பத்திரிகை வைக்க தோழி வீட்டுக்குச் செல்வதாகச் சென்ற மணப்பெண் சந்தியா மாயமானார். இது சம்பந்தமாக சந்தியாவினுடைய பெற்றோர் கடத்தூர் காவல் நிலையத்தில் காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்துத் தர வேண்டுமென புகார் மனு கொடுத்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சந்தியாவின் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவில் உள்ள தோழி வீட்டில் சந்தியா இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் சந்தியாவை மீட்டு, கோபிச்செட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியான பாரதி பிரபா முன் ஆஜரான மணப்பெண் சந்தியா, ‘எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை. நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னா நாங்க செத்துப் போயிடுவோமுன்னு என்னோட அம்மா, அப்பா சொன்னதால வேற வழியில்லாம இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன். என் அப்பா வயசு ஆளை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்கிறது. இதை எங்க வீட்ல எடுத்துச் சொல்லியும் புரிஞ்சிக்கலை. அதனாலதான் வீட்டை விட்டுப் போயிட்டேன்’ என்றிருக்கிறார். பிறகு சந்தியாவுக்கும், அவருடைய பெற்றோருக்கும் அறிவுரை செய்து நீதிபதி அனுப்பி வைத்திருக்கிறார்.

சந்தியாவை தேடிப் பிடித்தது எப்படி என போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``23 வயதான சந்தியாவுக்கு 43 வயதான எம்.எல்.ஏ ஈஸ்வரனை கல்யாணம் முடிக்க பெற்றோர் வற்புறுத்தியிருக்கின்றனர். ஆரம்பத்தில் பெற்றோரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் சந்தியா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார். ஒருகட்டத்தில் திருமண பத்திரிகையை தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் தோழிகளுக்கு கொடுக்கச் சென்ற இடத்தில், ‘நல்லா படிச்சிருக்க, அழகா வேற இருக்க. அப்புறம் ஏன் உன்னைவிட 20 வயசு அதிகமா அப்பா வயசுல உள்ள ஆளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச’ என பலரும் கேள்விகளால் குடைந்திருக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் சந்தியாவுக்கு சங்கடத்தைக் கொடுக்க, பெற்றோர்களிடம் திருமணத்தை நிறுத்தச் சொல்லி கேட்டிருக்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை என பெற்றோர் மறுக்க, அதன்பின்னர் தான் வீட்டை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா, எங்கு செல்வது எனத் தெரியாமல் பேருந்திலேயே பல இடங்களில் சுற்றியிருக்கிறார். அதன்பின்னர் தான் மணப்பாறை தோழிக்கு போன் அடித்து அங்கு சென்றிருக்கிறார்” என்றார்.

 

 

இது இப்படியிருக்க, கல்யாணம் நின்னுடுச்சின்னா, என்னோட மரியாதை என்னாகுறதுன்னு எம்.எல்.ஏ ஈஸ்வரன் அதே நாளில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய தீவிரமாக பெண் தேடி வருகிறார். உறவினர் வகையில் இதுவரை 3 பெண்களை டிக் செய்து வைத்திருப்பதாகவும், அதில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.