வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (05/09/2018)

கடைசி தொடர்பு:14:19 (05/09/2018)

`மாற்றப்படுவாரா டி.ஜி.பி ராஜேந்திரன்?!' - கோட்டையில் நடக்கும் ஆலோசனை

டிஜிபி ராஜேந்திரன்

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவரும்நிலையில் தமிழக காவல்துறை டி.ஜி.பியான டி.கே.ராஜேந்திரனை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனரான ஜார்ஜ் வீடு உள்ளிட்ட 40 இடங்களில் டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்திவருகின்றனர். கடந்த வாரத்தில் குட்கா அதிபர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 

தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. இந்தச் சோதனையால் தமிழக காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்களால் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்த நிலையில், ஏற்கெனவே இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பில்தான் டி.ஜி.பியாக டி.கே.ராஜேந்திரன் இருந்துவருகிறார். குட்கா விவகாரத்துக்குப்பிறகு டி.கே.ராஜேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மாநில உள்துறை அலுவலகத்தில் குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக முதல்வருடன் ரகசியமாக உள்துறைச் செயலாளரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சி.பி.ஐயின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன் டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன் பதவி விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அடுத்த டி.ஜி.பி சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்களில் ஒருவருக்கு டி.ஜி.பி பதவி கிடைக்கும் என்று சொல்கின்றனர் டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகள்.