வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (05/09/2018)

கடைசி தொடர்பு:16:00 (05/09/2018)

`வாரிசுகளுக்கு மருத்துவத்துறையில் இடஒதுக்கீடு வேண்டும்'- வ.உ.சி. பேத்தி வேண்டுகோள்!

தியாகிகளின் வாரிசுகளுக்கு மருத்துவத்துறையில் மீண்டும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். 

வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி செல்வி

கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின், 147-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வ.உ.சி.யின் கொள்ளுப்பேத்தி செல்வியின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது படத்துக்கு செல்வி மலர் தூவி மரியாதைசெய்தார். செய்தியாளர்களிடம் பேசிய செல்வி, ``வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், உமறுப்புலவர் ஆகியோர் பிறந்த மாவட்டம் தூத்துக்குடி. பாரதியாரின் பிறந்தநாளை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதைப்போல வழக்கறிஞரான வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற  கோரிக்கையை முன் வைக்கிறோம்.

வ.உ.சி-யைப் போல பல தலைவர் இந்திய நாட்டு விடுதலைக்காக பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மருத்துவத்துறையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள், மீண்டும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரிசுகளுக்கு மருத்துவத்துறையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க