முட்டைக் கொள்முதல் டெண்டர் நிறுத்தி வைப்பு! - தற்காலிகத் தடை விதித்த உயர் நீதிமன்றம் | Madras HighCourt ban on egg Tender temporarily

வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (05/09/2018)

கடைசி தொடர்பு:15:31 (05/09/2018)

முட்டைக் கொள்முதல் டெண்டர் நிறுத்தி வைப்பு! - தற்காலிகத் தடை விதித்த உயர் நீதிமன்றம்

மிழக அரசின் சத்துணவு முட்டைக் கொள்முதலுக்கான டெண்டருக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

சத்துணவுத் திட்டம்

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் நாள்தோறும் 48 லட்சம் முட்டைகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதில் தமிழக விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் வெளிமாநில கோழிப் பண்ணைகளுக்குத் தடைவிதித்து தமிழக பண்ணைகள் மட்டும் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்துக் கரூரைச் சேர்ந்த நான்கு கோழிப் பண்ணை அதிபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ' இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் டெண்டர் அறிக்கையால் தனியார் கோழிப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த டெண்டரில் வெளிமாநில கோழிப் பண்ணைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த வழக்கின் விசாரணையின்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `` கொள்முதல் விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது, ஆரோக்கியமான போட்டிகளுக்காகவே இப்படியொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் இடைத்தரகர்களைத் தவிர்க்க முடியும்' எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் மகாதேவன், ` இதுதொடர்பாக விளக்கமளிக்க அவகாசம் வேண்டும்' என மனுதாரர்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை சத்துணவு முட்டை டெண்டருக்குத் தடைவிதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வரும் 7-ம் தேதிக்குள் அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் 12-ம் தேதிக்குள் விளக்க மனுக்களை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.