`விஜயபாஸ்கரும் டி.ஜி.பி-யும் பதவி விலக வேண்டும்!' - ஜவாஹிருல்லா கோரிக்கை

மிழகத்தில், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றுவருகிறது. ' இந்தச் சோதனையால் தமிழகம் பெரும் அவமானத்துக்கும் தலைகுனிவுக்கும் ஆளாகியுள்ளது' என வேதனைப்படுகிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா. 

ஜவாஹிருல்லா

குட்கா ஊழல் தொடர்பாக இன்று காலை முதல் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, டி.ஜி.பி ராஜேந்திரன் வீடு, முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றுவருகிறது. இந்த ரெய்டுகுறித்துப் பேசிய ஜவாஹிருல்லா, ``குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், 40 இடங்களில் இந்தச் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.

ஆளும் கட்சியின் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆரம்பம் முதலே குட்கா ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், அவர்மீது தமிழக முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்ததே, இன்று சி.பி.ஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்று சோதனைசெய்யவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல, இந்த ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் டி.ஜி.பி., ராஜேந்திரன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாகப் பொறுப்பில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடைபெற்றுவருகிறது.

அதேபோல, முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்துவருகின்றன. இந்தச் சோதனையால், தமிழகம் பெரும் அவமானத்துக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாகியுள்ளது. எனவே, இனியும் காலத்தைக் கடத்தாமல், தமிழக முதல்வர் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையெனில் இவர்களைப் பதவிநீக்கம் செய்ய தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!