சென்னை பறக்கும் ரயிலை குறிவைக்கும் கும்பல்? - களத்தில் இறங்கியது சென்ட்ரல் ரயில்வே படை | Security force keenly watching Velachery - Beach train route

வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (05/09/2018)

கடைசி தொடர்பு:16:42 (05/09/2018)

சென்னை பறக்கும் ரயிலை குறிவைக்கும் கும்பல்? - களத்தில் இறங்கியது சென்ட்ரல் ரயில்வே படை

சென்னை வேளச்சேரி - கடற்கரை மார்க்கமாக இயக்கப்படும் பறக்கும் ரயிலைக் கவிழ்க்க, தொடர்ந்து சதிவேலை செய்துவரும் மர்ம நபர்களைக் காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது. 

பறக்கும் ரயில்
 

கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 7 மணியளவில்,  பறக்கும் ரயில் ஒன்று வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்குப் புறப்பட்டது.  வேளச்சேரி- பெருங்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின் அடிப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.  ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளத்தைப் பார்த்த அவருக்கு பெரும்அதிர்ச்சி. தண்டவாளத்தில், உடைந்த சிமென்ட் கற்கள் காணப்பட்டன. இதுகுறித்து வேளச்சேரி ஸ்டெஷன் மாஸ்டருக்குத் தகவல் கொடுத்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, திருவான்மியூர் ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. 

ரயில்வே போலீஸ் ஏடிஜிபி சைலேந்திர பாபு, நேற்று சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி  ரயில் நிலையம் வரை ஆய்வு மேற்கொண்டார். பறக்கும் ரயிலில் பயணம்செய்து ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் பார்வையிட்டார். பின்னர், வேளச்சேரி ரயில் நிலையம்  அருகே தண்டவாளத்தில் சிமென்ட் ஸ்லாப் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்  குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரயில் நிலையம்
 

இந்த நிலையில், நேற்று மாலை பெருங்குடி- தரமணி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில்  மீண்டும் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது.  பறக்கும் ரயிலின் ஓட்டுநர் தண்டவாளத்தில் ஏதோ பொருள் இருப்பதைக் கவனித்து, ரயிலின் வேகத்தைக் குறைத்துள்ளார். ஆனாலும் சிமென்ட் கற்கள்மீது ரயில் ஏறி இறங்கியது. உடனடியாக ரயிலை நிறுத்திய ஓட்டுநர், ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இந்தச் சம்பவம், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

ஒருமுறை கற்கள் வைக்கப்பட்டபோது, சிறுவர்கள் யாரேனும் விளையாட்டுக்கு வைத்திருப்பார்கள் என்று பயணிகள் மனதைத் தேற்றிக் கொண்டனர். ஆனால் தற்போது இரண்டாவது முறையாக, அதுவும் ஏடிஜிபி ஆய்வுசெய்த பின்னர், இதுபோன்று நடந்திருப்பது பயணிகள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. ரயிலைக் கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்த, சென்னை சென்ட்ரல் ரயில்வே டி.எஸ்.பி., ரவி தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனி, போலீஸார் இரவு நேரங்களில் பறக்கும் ரயில் தண்டவாளப் பகுதியில் ரோந்தில் ஈடுபட உள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க