வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (05/09/2018)

கடைசி தொடர்பு:18:28 (05/09/2018)

மிரட்டும் குட்கா... கதறும் அ.தி.மு.க... அதிரடி சி.பி.ஐ..!

மிரட்டும் குட்கா... கதறும் அ.தி.மு.க... அதிரடி சி.பி.ஐ..!

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் மீது ஊழல் புகார்கள் சொல்லப்படுவது வாடிக்கைதான் என்று கடந்துபோகும் நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள் மீதே புகார் எழுந்திருப்பது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்வதற்கு, அரசியல்வாதிகள், காவல்துறை உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருப்பதால் அனைவராலும் இப்பிரச்னை உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

சமீபத்தில் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து குட்கா பதுக்கலைக் கண்டுபிடிக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த சோதனைகளின் தொடர்ச்சியாக இன்று, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளைச் சுற்றி வளைத்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. குறிப்பாக, குட்கா வழக்கின் வேகத்தைப் பார்த்து, தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு, கதறத் தொடங்கி இருக்கிறது. ஆட்சியைக் காப்பாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறார்.

விஜயபாஸ்கர், ஜார்ஜ்

மனிதர்களின் உயிருக்கு உலைவைக்கும் குட்கா மற்றும் பான்மசலா பொருள்கள் விற்பனைக்கு கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இத்தகைய பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, குட்கா மற்றும் பான்மசாலா பொருள்கள் விற்பனைக்குத் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டார். அவ்வப்போது, வணிக வரித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வந்தாலும், பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் காம்பிளக்ஸ் வரை, தங்கு தடையில்லாமல் குட்கா, பான்மசலா போன்றவை கிடைத்து வந்தன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ரகசியமாக இயங்கி வந்ததும்; வெளிமாநிலங்களிலிருந்து தங்கு தடையின்றி குட்கா உள்ளிட்ட பொருள்கள் தமிழகத்துக்குள் வந்ததும் போலீஸாரின் ரகசிய விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து, 2014-ம் ஆண்டு சி.பி.ஐ போலீஸாருக்குப் புகார் மனுக்கள் குவிந்தன. குட்கா தொழில் சட்டவிரோதமாக நடப்பதும், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசின் உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் துணை போவதாகவும் சி.பி.ஐ-க்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தப் பிரச்னையைக் கவனிக்க அதிகாரிகள் குழுவை சி.பி.ஐ. நியமித்தது. இந்த விசாரணை, 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்தது. தங்களுக்கு வந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதை அந்தக் குழு கண்டுபிடித்தது. இதையடுத்து, ஓர் அறிக்கையைப் புகார் மனுவாகத் தமிழக அரசுக்கு சி.பி.ஐ அனுப்பி வைத்தது.

அந்த அறிக்கையில் பல வி.ஐ.பி-க்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. வழக்குப் பதிவு செய்வதற்கு வசதியாக, விரிவான அறிக்கை ஒன்றை அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பார்வைக்கு சி.பி.ஐ அனுப்பி வைத்தது. அந்தக் கடிதம், சென்னையில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டட்து. துணை கமிஷனர் ஜெயக்குமார், அந்த அறிக்கை மீது மேல் விசாரணை நடத்தினார். அவர், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம், `குட்கா' பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்குகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது மூட்டை, மூட்டையாகத் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. தமிழக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு குட்கா பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் பெறப்பட்டன. மாதவரம் பகுதியில் உள்ள கிடங்கில் கிடைத்த டைரி ஒன்றில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக யார், யாருக்கெல்லாம் லஞ்சப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்ற விவரம் இருந்தது.

ஜெ.அன்பழகன் ஸ்டாலின்

அரசியல் முக்கியப் புள்ளிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் இந்தப் பிரச்னையில் இடைத்தரகர்களாக இருந்து உதவி செய்துள்ளார்கள் என்பது அப்போது தெரியவந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் கையூட்டு வழங்கப்பட்டுள்ள விவரமும் வெளியாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர், இந்தப் பிரச்னை அடங்கிப்போனது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு, குறிப்பிட்ட குட்கா கம்பெனி, வருமான வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னை, பாண்டிச்சேரி, ஆந்திராவில் அப்போது சோதனை நடத்தப்பட்டது. அதில் மேலும் பல தகவல்கள் கிடைத்ததை அடுத்து, அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் ஆகியோருக்கு வருமான வரித் துறை கடிதம் அனுப்பியது. அமைச்சர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், வணிக வரித் துறை அதிகாரிகள் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித் துறை கேட்டுக் கொண்டது.

இதில், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய ராம மோகனராவ், கூடுதல் விவரம் தேவை என்று மேலும் ஆதாரம் கேட்டு வருமான வரித் துறைக்குக் கடிதம் எழுதினார். வருமான வரித் துறையும் கூடுதல் ஆதாரங்களை அளித்தது. ஆனாலும், ராம மோகனராவ், மேல் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார். இந்நிலையில், 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென்று, டிசம்பர் 21-ம் தேதி தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் வீடு மற்றும் சென்னைத் தலைமைச் செயலகத்தில் அவரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனை நடந்த மறுநாள், `மாமூல் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் பட்டியல்' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கமிஷனர் ஜார்ஜ் எழுதிய கடிதம் வெளியானது. அதாவது, அந்தக் கடிதத்தில் `எந்தெந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது' என்று உள்துறை செயலாளருக்கு ஜார்ஜ் எழுதிய கடிதம், போலீஸ் அதிகாரிகளுக்கு குட்கா விவகாரத்தில் தொடர்பு இருந்ததை உறுதி செய்தது. ஜார்ஜ் மீது சிலர் குற்றம்சாட்டி வந்த நிலையில், ஜார்ஜ் எழுதிய கடிதம் சில மர்மங்களை அப்போது வெளியே கொண்டு வந்தது. இந்த நிலையில், ஜார்ஜ் கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

குட்கா வழக்கு மற்றும் அதுதொடர்பான பிரச்னையைச் சட்டமன்றத்தில் கிளப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் திமுக எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன். அதில், ``அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் பலருக்கு இதில் தொடர்பு உள்ளது. தமிழக அரசோடு தொடர்புடையவர்களுக்குப் பங்கு இருப்பதால் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்'' என்று வலியுறுத்தி இருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சில அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் வழக்கு தொடுத்து இருந்தனர். அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. மத்தியக் கலால் வரித் துறையும் இந்த வழக்கில் மனு போட்டு, ரூ.55 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் கொடுத்தது. வருமான வரித் துறையும் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ரஜேந்திரன், குட்கா வழக்கு

இந்த வழக்கில் எதிர்பாராத விதமாக, ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் 2017-ம் ஆண்டு, வருமான வரித் துறை நடந்திய சோதனையில் சசிகலா அறையில் குட்கா ஊழல் தொடர்பாக ஒரு கடிதத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போதைய டி.ஜி.பி அனுப்பிய கடிதம். இப்படி, பல வி.ஐ.பி-க்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது அம்பலமான நிலையில், குட்கா வழக்கில் கடந்த ஜனவரி 25-ம் தேதி அனைத்துத்தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. கடந்த ஏப்ரல் மாதம், சி.பி.ஐ விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. விசாரணை முடிவில், குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க தடையில்லை என்று 18.5.18 அன்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

குட்கா விவகாரம் சி.பி.ஐ கைக்குப் போனதால் அவர்கள், வழக்கின் ஆவணங்களை தூசி தட்டினர். குட்கா தொழில் பங்குதாரர் மாதவராவ் என்பவரின் டைரிதான், இந்த வழக்கில் லஞ்சப் பணப் பரிமாற்றம் குறித்த ஆதாரபூர்வ ஆவணம் என்பதால் அவரிடம் சமீபத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எந்த நேரத்திலும் சி.பி.ஐ அதிரடி நடவடிக்கைகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தில் 40 இடங்களில் சி.பி.ஐ களம் இறங்கி சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ், இப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன் என்று பல வி.ஐ.பி-க்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். போலீஸ் அதிகாரிகள் 23 பேர் மற்றும் உணவுத் துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகர்கள் என்று பலருக்கு சம்மன் அனுப்பும் பணி, இப்போது தொடங்கியிருக்கிறது. 

குட்கா ஊழலில் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் எனப் பலரும் ஆதாரத்தோடு சிக்கியிருப்பதால் பலரின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. தலைக்கு மேல் கத்தியாக, குட்கா வழக்கு மிரட்டிக் கொண்டிருப்பதால் ஆட்சி ஆட்டம் காண்பதற்கு முன், அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்