`என்னை துரோகி என்று சொல்லாதீங்க மாமா' - நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸின் 21 ஆண்டு உதவியாளர் கண்ணீர்! | O.Paneerselvam's personal assistant statement

வெளியிடப்பட்ட நேரம்: 17:11 (05/09/2018)

கடைசி தொடர்பு:17:11 (05/09/2018)

`என்னை துரோகி என்று சொல்லாதீங்க மாமா' - நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்ஸின் 21 ஆண்டு உதவியாளர் கண்ணீர்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர்களில் ஒருவர் ரமேஷ். இவர், கடந்த 2-ம் தேதி வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ்

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர், ரமேஷ். தேனி மாவட்டத்தில் ஜெய்லானி மற்றும் மதன் என பன்னீர்செல்வத்துக்கு இரு உதவியாளர்கள் என்றால், சென்னையில் ரமேஷ். அமைச்சர்கள், அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள் என ரமேஷைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கடந்த 21 வருடங்களாக ஓ.பன்னீர்செல்வத்துடன் நிழலாக இருந்த ரமேஷ், கடந்த 2-ம் தேதி வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்டதாகச் செய்தி வெளியானது.


இந்நிலையில், இன்று ட்விட்டரில் ’ஓ.பி.எஸ் ரமேஷ்’ என்ற பெயரில் டிவிட் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ”என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகவே வாழ்ந்த நான் துரோகியா? என் நினைவு தெரிந்ததிலிருந்து உங்களுக்காக மட்டுமே உழைத்தேன். என்னை ஒதுக்கிவிட்டீர்கள். கலங்கவில்லை. என்னை துரோகி என்று சொல்லாதீர்கள் மாமா, மனது வலிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தது. ரமேஷ் என்ன தவறு செய்தார்? அவரை ஏன் துரோகி என ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார் என்பது மர்மமாக உள்ளது.