210 மாணவர்களுக்கு பாடம் நடத்துவது 5 பேர்! - ஆசிரியர் தினத்தில் கொதித்தெழுந்த மாணவர்கள் | Cuddalore: Thitgudi school Students staged protest in teachers day

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (05/09/2018)

கடைசி தொடர்பு:18:20 (05/09/2018)

210 மாணவர்களுக்கு பாடம் நடத்துவது 5 பேர்! - ஆசிரியர் தினத்தில் கொதித்தெழுந்த மாணவர்கள்

210 மாணவ - மாணவியருக்கு ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகளாகப் பாடம் நடத்திவருகின்றனர். "கூடுதல் ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி, ஆசிரியர் தினமான இன்று மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ம.புடையூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை உள்ள பள்ளியில், 118 மாணவிகள், 92 மாணவர்கள் என மொத்தம் 210 பேர் படித்துவருகின்றனர். பள்ளியில் தற்போது 5 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்துவருகின்றனர். 12-ம் வகுப்பு வரை உள்ள மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2 ஆண்டுகளாகக் குறைந்த அளவே ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, இப்பகுதி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிகள் என அனைவருக்கும் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மாணவர்கள் போராட்டம்

இதனால், ஆசிரியர் தினமான இன்று காலை பள்ளி முன் பெற்றோர்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்களைப் பார்த்தவுடன்  மாணவ, மாணவியர் பள்ளியை விட்டு வெளியேறினார்கள். பின்னர் பெற்றோர்களும், மாணவ மாணவியரும், ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து பள்ளி முன்பு  கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். ஆசிரியர் தினத்தன்று வகுப்பில் மாணவ, மாணவியர் இல்லாத நிலையில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளியிலரிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.