எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கும் விஜயபாஸ்கர்! - ராஜினாமா செய்ய வைக்கத் திட்டம்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

விஜயபாஸ்கர்

குட்கா வழக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சி.பி.ஐ அதிகாரிகள், இன்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்திவருகின்றனர். இது தொடர்பாக தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், `குட்கா வழக்கில் சி.பி.ஐ முழுவீச்சில் இறங்கியுள்ளது. மத்திய அரசின் அழுத்தமே இந்த ரெய்டுக்குக் காரணம். சில நாள்களுக்கு முன்பிருந்தே, விரைவில் ரெய்டு நடக்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுவந்தது. அதன்படி, இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தீர்வு காணும் வகையில், மூத்த அமைச்சர்கள் சிலரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி

இந்த ஆலோசனையின்படி, இன்று இரவு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது,  அமைச்சர் பொறுப்பிலிருந்து விஜயபாஸ்கரை ராஜினாமா செய்யவைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர் நாளை டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, விஜயபாஸ்கரை பதவிவிலக முதல்வர் கூறினார். ஆனால், அமைச்சர்  இதை மறுத்தேவந்தார். தற்போது, இந்த விவகாரம் பெரிய அளவில் தலைதூக்கியிருப்பது, அமைச்சருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருந்தாலும், அமைச்சருக்கு பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!