எட்டு வழிச் சாலையைத் தொடர்ந்து, வருகிறது 12 வழிச்சாலை- எங்கு... ஏன்? | Farmers slams new highway road scheme

வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (06/09/2018)

கடைசி தொடர்பு:07:44 (06/09/2018)

எட்டு வழிச் சாலையைத் தொடர்ந்து, வருகிறது 12 வழிச்சாலை- எங்கு... ஏன்?

கோவை டு திருச்சியில் அமையவிருக்கும் 12 வழிச்சாலை குறித்த கட்டுரை...

எட்டு வழிச் சாலையைத் தொடர்ந்து, வருகிறது 12 வழிச்சாலை- எங்கு... ஏன்?

"எங்களை இப்படி அநாதையாக ஆக்கிவிட்டு, எங்களுடைய நிலத்தைப் பறித்துக்கொண்டால், நாங்கள் எங்கே போய் பிழைப்பது? எங்களையெல்லாம் மீறித்தான் உங்களால் இந்த நிலத்தைக் கொண்டுபோக முடியும். எனவே, எங்களை ஏதாவது செய்துவிட்டு எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” - சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதுடன், அதைத் தமிழக அரசு செயல்படுத்தத் தொடங்கிய நேரத்தில்... சேலம், தருமபுரி மாவட்ட விவசாயிகள் ஒருமித்த குரலில் பேசிய வார்த்தைகள்தான் இவை.

சேலத்திலிருந்து சென்னைவரை எட்டுவழி பசுமைச் சாலை திட்டம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவுசெய்து, தமிழக அரசு அதைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்காக, நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுவருகிறது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். "இந்தப் பசுமைவழிச் சாலைக்காக 7,500 ஏக்கர் விவசாய நிலங்களும், 250 கிலோ மீட்டர் வனப்பகுதிகளும் (குன்று, மலைகள் உள்பட) பாதிக்கப்படும் எனவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்'' எனவும் விவசாயிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், 'எட்டு வழிச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், "அடுத்த உத்தரவு வரும்வரை நிலம் கையகப்படுத்தும்போது, அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது'' என உத்தரவிட்டுள்ளது. 

நெடுஞ்சாலை

இதையடுத்து, பசுமைவழிச் சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த தீர்ப்பில் "2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் சட்டத்தின் 105 சட்டப்பிரிவு செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். 105 சட்டப்பிரிவின்படி, எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, அவர்களது மீள் குடியேற்றம், மறுவாழ்வு, நியாயமான இழப்பீடு போன்றவற்றை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்தனர்.

இதற்கிடையே, மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை, "திருச்சியிலிருந்து கோவைக்கு கரூர் வழியாக எட்டு வழிச் சாலை மட்டுமின்றி 12 வழிச்சாலையாகவும் அமைப்பதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கான சர்வே பணிகள் நடைபெற்றுவருகின்றன'' என்று கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார். 

ராமலிங்கம்இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துவருகிறார்கள். `சேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டமே மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு நெடுஞ்சாலைத் திட்டம் கொண்டுவரப்படும் என்று கூறுவது, தமிழகத்தை வறண்டப் பாலைவனமாக மாற்றும் செயல்'' என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயச் சங்கச் செயலாளர் ராமலிங்கத்திடம் பேசினோம். அவர், "பொதுவாக, சாலைத் திட்டத்துக்காக விவசாய நிலங்களை அழிப்பது என்பது தவறு. பன்னிரண்டு வழிச் சாலை என்பது தேவையில்லாதது. ஏற்கெனவே, நான்கு வழிச் சாலை உள்ளது. அந்தச் சாலை வருவதற்காக நிலங்களைக் கையகப்படுத்திய விவசாயிகளுக்கே இன்னும் பணம் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, மணவாசல் வரை மட்டும்தான் நான்கு வழிச் சாலை உள்ளது. அதற்கு அப்பால் உள்ள சாலை இருவழிச் சாலையாக மட்டுமே உள்ளது. இந்த வழிச் சாலையையே, இன்னும் அகலப்படுத்தலாமே... அதைவிட்டுவிட்டு, புதிதாகப் பன்னிரண்டு வழிச்சாலை என்பது விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். அரசியல்வாதிகளின் வீடுகளோ, நிலங்களோ இருக்கும் பகுதிகளில் சாலைகள் புதிதாகப் போடப்படுவதில்லை. அதேநேரத்தில், விவசாய நிலம் உள்ள பகுதிகளில் மட்டும் அவர்கள் சாலை அமைக்கத் தயாராகிவிடுகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள்'' என்றார், மனவேதனையுடன்.

கந்தசாமிகட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி, "பொது நோக்கத்துடன் இதைக் காணும்போது புறவழிச்சாலைகள் வருவது என்பது நல்லதுதான். ஏனெனில், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவசரயுகத்தில் நாம் இருப்பதால், விரைந்து பயணிக்க வேண்டும் என்ற தேவையும் அதிகம் உருவாகிறது. வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் இதைக் கொண்டுவருகிறோம் என்று சொல்வார்கள். சாலை வசதிகள் இல்லாமல் வாகனங்களில் பயணிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போதுதான் அதைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருக்கிறது. நல்ல திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது என்பது சகஜம்தான். இதற்காக, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி காலத்திலேயே சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேநேரத்தில், இதுபோன்ற திட்டங்களுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும்போது, சந்தை மதிப்பு விலையை அரசாங்கம் கொடுப்பதில்லை. அடிமாட்டு விலைக்கு நிலங்களை அரசாங்கம் வாங்குவதால்தான் பிரச்னையும், எதிர்ப்பும் ஏற்படுகிறது. கோவை நகர மக்கள் புதிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால், அதேநேரத்தில், இந்தத் திட்டம் வந்தால் பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்குச் செல்வதற்கு மாற்றுவழி ஒன்று உண்டாகும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்'' என்றார். 

எந்தவொரு திட்டமானாலும், ஆதரவும் எதிர்ப்பும் ஏற்படுவது வாடிக்கைதான். அதேநேரத்தில், மக்களைப் பாதிக்காத வகையிலான திட்டம் எதுவானாலும் மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால், அந்தத் திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதுதானே சிறப்பான முடிவாக இருக்கமுடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close