வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (05/09/2018)

கடைசி தொடர்பு:20:26 (05/09/2018)

`நாங்க இருக்கோம் விஜய்!’ - குழந்தைகளை இழந்த குன்றத்தூர் ரசிகருக்கு ரஜினி ஆறுதல்!

சென்னையில், இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார்.

ரஜினி

சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தப்பியோட முயன்றவர் அபிராமியைக் காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய்

அப்போது, விஜய்யின் கைகளைப் பற்றிக்கொண்டு, ``எந்த ஆறுதலும், இந்தக் கொடிய நிலைமைக்கு மருந்தாகாது. மீண்டு வாருங்கள் விஜய்; ஆண்டவன் துணை இருப்பான். நாங்க இருக்கோம்'' என்று கலங்கிய கண்களுடன் ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினியைக் கண்டதும் விஜய் மனக்குமுறலால் உடைந்து அழுதுள்ளார். இது தொடர்பாக விஜய்யிடம் பேசுகையில்,``நான் ரஜினியின் தீவிர ரசிகன். அதேபோல என்னுடைய குழந்தைகளுக்கும் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே பேசும், சைகைகளைச் செய்து காட்டும்'' என்று உடைந்த குரலில் பேசினார் விஜய்.