`ஷோபியா பாதுகாப்பு கோரினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ | Will give police protection to Shobia's family, says Minister Kadambur Raju

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (05/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (05/09/2018)

`ஷோபியா பாதுகாப்பு கோரினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ

”தமிழகத்தில், அனைவருக்கும் உரிய பாதுகாப்பை காவல்துறை அளித்துவருகிறது. மாணவி ஷோபியாவுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என்றால், அவருக்கு காவல்துறைமூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. விமானத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு விதிமுறைகள் உள்ளன. பா.ஜ.க மீது எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும், விமானம் தரையிறங்கிய பிறகு அவரிடம் அந்த மாணவி தன் கருத்தைத் தெரிவித்திருக்கலாம். இதுதான் ஜனநாயக முறையானது. அதைவிடுத்து, விமானத்திற்குள்ளேயே எழுந்து நின்று, அவசரமாக கோஷம் எழுப்பக் காரணம் என்ன? எதை எப்படிக் கேட்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.

விமானத்துக்குள்ளேயே கோஷம் எழுப்பியதால், தமிழிசைக்கு மனசங்கடம் ஏற்பட்டிருக்கலாம். அதனால், அவர் விமானம் தரையிறங்கிய பின், அந்த மாணவியிடம் கோஷம் எழுப்பியதுகுறித்துக் கேட்டிருக்கலாம். தமிழகத்தில் அனைவரையும் பாதுகாக்கும் சூழல்தான் நிலவுகிறது. யாருக்கும் யாரும் மிரட்டல் விடுக்க முடியாது. மாணவி ஷோபியாவுக்கோ அவரது குடும்பத்திற்கோ மிரட்டல் விடப்படும் சூழல் நிலவினால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.” என்றார்.

ஷோபியாவுக்கு பாதுகாப்பு அளிப்பதுகுறித்து மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா கூறுகையில், “தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம்குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. பா.ஜ.க., மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் பா.ஜ.க-வினர்மீது ஷோபியாவின் தந்தை அளித்த புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தேவைப்பட்டால், அந்தப் புகார்குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஷோபியா மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு கோரினால், பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.  

   

நீங்க எப்படி பீல் பண்றீங்க