வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (05/09/2018)

கடைசி தொடர்பு:21:40 (05/09/2018)

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை! குட்கா ரெய்டு குறித்து சி.பி.ஐ விளக்கம்

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னை, மும்பை, திருவள்ளூர் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதாக சி.பி.ஐ விளக்கமளித்துள்ளது. 

சி.பி.ஐ ரெய்டு

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையாளர் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் வீடுகளில் இன்று சோதனை நடைபெற்றது. இந்தநிலையில், சோதனைகுறித்து சி.பி.ஐ அளித்துள்ள விளக்கத்தில், 'குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், பாண்டிச்சேரி, மும்பை, குண்டூர், பெங்களூரு ஆகிய ஊர்களில் உள்ள 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

விற்பனை வரித்துறை, சுங்க வரித்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, உயர் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக 26-4-2018-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தடைசெய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் எவ்வாறு சட்ட விரோதமாகத் தயாரிக்கப்படுகின்றன; இறக்குமதி செய்யப்படுகின்றன; விற்பனை செய்யப்படுகின்றன என்று எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இருந்து செயல்படும் தனியார் குட்கா நிறுவனம் ஒன்று குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைக் கடந்த 2011ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்குக் கடந்த 2013ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அந்த நிறுவனம் சட்டவிரோதமாக குட்கா உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.