`மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!’ - சி.பி.ஐ ரெய்டுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

'குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளியாக மாட்டார். இதுபோன்ற பிரச்னைகளைக் கடந்து வெற்றிபெறுவேன்' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜயபாஸ்கர்

குட்கா ஊழல் தொடர்பாக, இன்று காலைமுதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்றது. இந்தச் சோதனையின் எதிரொலியாக, அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், `குட்கா, பான்மசாலா விற்பனை கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. மேலும், குட்கா, பான்மசாலாவில் தொடர்புடைய மாதவ்ராவ் என்பவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நான் சந்திக்காத நிலையில், என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர்.

சட்டத்தை ஏற்று நடக்கும் குடிமகன் என்ற அடிப்படையில் எந்த விசாரணைக்கும் என் ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளேன்; இன்று நடந்த விசாரணை உட்பட. இரவும் பகலும் பொதுச்சேவையாற்றி, மக்கள் நலவாழ்வுத்துறையை இந்திய அளவில் சிறந்து விளங்க நடவடிக்கை எடுத்துவரும் என்மீது, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அரசியல் எதிரிகள் முன்வைப்பது இயல்புதான். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். இவற்றையெல்லாம் கடந்து, மக்கள் பணியில் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறேன். 'என் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை'. இந்தப் பிரச்னையை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொண்டு வெளிவருவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!