வெளியிடப்பட்ட நேரம்: 21:47 (05/09/2018)

கடைசி தொடர்பு:21:47 (05/09/2018)

தூத்துக்குடி ஆய்வாளர் குடியிருப்பில் 10 மணிநேரம் தொடர்ந்த சி.பி.ஐ சோதனை!

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத்தின் ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில், குட்கா வழக்கு தொடர்பாக சி.பி.ஐ 7 பேர் கொண்ட குழுவினர், 10 மணி நேரம் தொடர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பத் வீட்டில் சோதனை

போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத்தமிழகத்தில் குட்கா ஊழல் வழக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, குட்கா ஊழல் தொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை சி.பி.ஐ அதிகாரிகள் தாக்கல்செய்தனர். கடந்த வாரம் சென்னையில் உள்ள குட்கா குடோன்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையிட்டு, குடோன்களுக்கு சீல் வைத்தனர். இதையடுத்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி., ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

சி.பி.ஐ வசம் சிக்கியுள்ள டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் 40 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சம்பத் வீட்டில், மதுரையிலிருந்து இரண்டு  கார்களில் வந்த சி.பி.ஐ அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இன்று காலை 7.30 மணியிலிருந்து மாலை 5.40 மணி வரை சோதனை நீடித்தது.

சம்பத் வீட்டில் சோதனை

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சம்பத், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், சமீபத்தில் ஆறுமுகநேரியில் இருந்து  தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், தற்போது வரை ஆறுமுகநேரியில் உள்ள காவலர் குடியிருப்பில்தான் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றியபோது, இவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இச்சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.  இச்சோதனையின்போது ஆய்வாளர் சம்பத், குடியிருப்பில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தாராம். இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சி.பி.ஐ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.  ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் நடந்த இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க