வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/09/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/09/2018)

அவிநாசி அருகே எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

திருப்பூர் அருகே, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவரது மனைவி காந்திமதி. 52 வயதான இவர், கடந்த இரண்டு வார காலமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்துகொண்டே சென்றதால், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு, காந்திமதிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவருக்கு எலிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர். அதைத் தொடர்ந்து,  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த காந்திமதி, நேற்றைக்கு முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

காந்திமதியின் வீடு அமைந்திருக்கும் பகுதியான சமத்துவபுரம், தொடர்ந்து பல மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமலும், அதிக துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் இருந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும்கூட சுகாதாரத் துறையினர் மிகவும் அலட்சியமாகவே இருந்துள்ளனர் என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். இந்நிலையில், காந்திமதியின் மரணத்துக்குப் பிறகே அப்பகுதியில் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது மாவட்ட சுகாதாரத்துறை.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறை இணை இயக்குநர் ஜெயந்தியிடம் பேசினோம். "உயிரிழந்த காந்திமதி ஏற்கெனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்துடன் சமீபத்திய கேரளா மழை வெள்ளத்துக்குப் பிறகான நாள்களில், அவர் கேரளாவுக்கும் சென்று வந்திருந்தார். அங்கிருந்துதான் அவருக்கு எலிக்காய்ச்சல் பரவியிருக்க வேண்டும். தற்போது, காந்திமதியின் வீடு அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியில் மருத்துவக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் மருத்துவ முகாமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.