'தலைமையாசிரியையிடம் மன்னிப்பு கேட்டுட்டு வாங்க' - பயத்தில் ப்ளஸ் டூ மாணவிகள் எடுத்த விபரீத முடிவு!

ஜமுனாமரத்தூர் அடுத்த குனிகாந்தூர்  ஜவ்வாது மலை வாழ்மக்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவிகள், ஆசிரியை கண்டித்ததால் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவி

திருவண்ணாமலை மாவட்டம்  ஜமுனாமரத்தூரை அடுத்த குனிகாந்தூர் மலை கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக ராமக்கா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ப்ளஸ் டூ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மாணவ, மாணவிகளுக்கு பாடத்தில் இருந்து சில கேள்விகளைக் கொடுத்து அதற்கான விடைகளை எழுதித் தரும்படி கூறி உள்ளதாக கூறப்படுகிறது. இதில், 3 மாணவிகள் ஆசிரியை கொடுத்த கேள்விகளுக்கு விடை எழுதாமலும், ஆசிரியையிடம் சொல்லாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. 

இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவிகளை ஆசிரியை ராமக்கா அழைத்து கண்டித்து, தலைமை ஆசிரியை பார்த்து அவரிடம் நடந்தவற்றை கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் வகுப்புக்கு வாருங்கள் என்று அனுப்பிவிட்டாராம். இதைக் கேட்ட  மூன்று மாணவிகளும் தலைமை ஆசிரியரிடம் செல்வதற்கு பயந்துகொண்டு பள்ளிக்கு வெளியே வந்து அரளி விதைகளை சாப்பிட்டுள்ளனர் அந்த மாணவிகள். அரளி விதை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்படவே மாணவிகளை பொதுமக்கள் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை அளித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவிகளுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜமுனாமரத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!