``பொதுமக்கள் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு!" - கரூர் ஆட்சியர் தகவல்

``பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தப்படுகிறது" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.


 
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட ஆட்சித்தலைவர்  அன்பழகன் தலைமையில் பொதுமக்களின் இருப்பிடத்துக்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், ``தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மக்களைத்தேடிச் சென்று அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், மக்களோடு மக்களாக இருந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், மக்களைத் தேடி அரசு என்ற நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடி சென்று பொதுமக்களின் குறைகள் தேவைகளை மனுக்களாகப் பெற்று அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றது. 

மனுக்களை பெறுவதுடன் அப்பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதாரம், மின்சாரம், குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்குப் பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. அனைத்து மனுக்களும் பரிசிலீக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலகர்களுக்கு முறையாக அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நிறைவேற்றுவதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம், மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் என பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், இ-பொதுசேவை மையங்கள், அம்மா அழைப்பு மையம், இணையதளம் வாயிலாக கோரிக்கை மனுக்கள் அளித்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய பதில் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களின் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கடவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 756 பணிகள் ரூ.1976.625 லட்சம் மதிப்பிலும், முள்ளிப்பா ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 318 பணிகள் ரூ.1117.592 லட்சம் மதிப்பிலும் நடைபெற்றுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!