வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (06/09/2018)

கடைசி தொடர்பு:07:29 (06/09/2018)

குடிநீரில் அதிகமாக கலக்கப்பட்ட குளோரின் பவுடர் - 20 பேருக்கு உடல்நலம் குன்றிய சோகம்!

சிவகங்கை அருகிலுள்ள சக்கந்தி கிராமத்தில் குடிதண்ணீர் சுகாதாரம் இல்லாமல் வழங்கப்பட்டதால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு சுமார் 20 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை ஒன்றியம், சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட கோமாளிபட்டி கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி முறையாக பராமரிக்காத காரணத்தாலும், அளவுக்கு அதிகமாக குடிநீரில் குளோரின் பவுடர் கலந்ததாலும் சுமார் 20 க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அதில்  சின்னையன், சாந்தி, பார்வதி, சுமதி, மாதவி உள்ளிட்ட 7 பேர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து சிவகங்கை சி.பி.எம் ஒன்றியச் செயலாளரரும், வழக்கறிருமான மதி பேசுகையில், ``சுத்தமான குடிநீர் முறையாக வழங்கக் கோரி கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில், தற்போது பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து, ஊர் முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், நூறு நாள் வேலை பணியின் மூலம் ஊரை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். 2013-14 ஆண்டில் சுமார் 7.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்தே செயல்படவில்லை. தற்போது அவசரம் அவசரமாக பழுது பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் ரூ.70,000 செலவில் அமைக்கப்பட்ட பெண்கள் கழிப்பறை பயன்படுத்தபடாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. 2017-18 ம் ஆண்டில் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டியும் முறையாக நீரூற்று பார்த்து அமைக்கப்படாததால் சுண்ணாம்புத் தன்மை அதிகமாகி சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது அதிகாரிகள் சோதனைக்காக அந்த நீரை எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், மத்திய அரசின் சுகாதார கழிப்பறை முறையாக கட்டப்படாமல் தரமின்றி அரைகுறையாக நிற்கிறது.

இதுபற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை ஊர் மக்கள் புகார் கொடுத்தும் பலனில்லை. தற்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு நிர்வாகம் கோமாளிபட்டி கிராமத்தில் முகாமிட்டு நடவடிக்கை எடுப்பது போல தொடர்ந்து செயல்பட்டு வந்தால் மக்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. மாவட்ட நிர்வாகம் இதில் தொடர் கவனம் செலுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க