கரூரில் அடுத்தடுத்த நான்கு வெவ்வேறு விபத்துகளில் நால்வர் பலி! | Four dead by four different accidents in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 04:35 (06/09/2018)

கடைசி தொடர்பு:07:37 (06/09/2018)

கரூரில் அடுத்தடுத்த நான்கு வெவ்வேறு விபத்துகளில் நால்வர் பலி!

கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டியில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசு நகரப்பேருந்து பசுபதிபாளையம் அருகே வந்த போது, கரூர் வடக்கு தெருவைச் சேர்ந்த எலெக்ட்ரிஷியனாக வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது பின்புறமாக வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து, கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து செம்மடை அருகே கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளைத் தாண்டி எதிர்த்  திசையில் சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கரூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (45) என்ற சுமை தூக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மூன்று தொழிலாளிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இதேபோல், அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று, சாலையைக் கடக்க முயன்ற நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி சசிகலா என்பவர் மீது சேலத்திலிருந்து கரூர் நோக்கி வந்த ஜீப் மோதி சம்பவ இடத்திலேயே சசிகலா பலியானார். இந்தச் சம்பவங்கள் குறித்து பசுபதிபாளையம் மற்றும் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வேலை முடித்து தனது ஊரான காட்டுப்புதூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்தார் விவசாயி திருமூர்த்தி. அப்போது கோவையில் இருந்து கரூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து திருமூர்த்தி சென்ற இருசக்கர வாகனத்தில் பலத்த சத்தத்துடன் மோத, தூக்கி வீசப்பட்ட திருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இந்த தொடர் விபத்துகள் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில் ``கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையத்தில் இருக்கு. அதிக தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கிற மாவட்டமும் இதுதான். அதனால், வாகனங்களும், பேருந்துகளும் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. அதோடு, ஸ்பீடு பிரேக்கர்களும் வைக்க முடியாது என்பதால், கண் இமைக்கும் நேரத்தில் அப்பாவிகளை மோதி சாகடிச்சுட்டு பறந்துடுதுங்க கனரக வாகனங்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்றார்கள்.