வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (06/09/2018)

கடைசி தொடர்பு:03:25 (07/09/2018)

சிக்கிக்கொண்ட 2 தரகர்கள்! குட்கா வழக்கில் சி.பி.ஐ.யின் முதல் அதிரடி!

குட்கா ஊழல் வழக்கில் தரகர்களாக செயல்பட்டதாக சென்னையை சேர்ந்த இரண்டு பேரை சி.பி.ஐ கைது செய்து விசாரணை நடத்திவருகிறது.

சிபிஐ 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டு வந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் என்றும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி  டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், குட்கா ஊழல் விவகாரத்தில் தரகர்களாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த ராஜேஷ், நந்தகுமார் என்ற இருவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.