`கணவரிடமிருந்து என்னைப் பிரிக்கப் பார்க்கிறார்'- ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் மீது மணிப்பூர் பெண் புகார்

தன்னை கணவரிடமிருந்து பிரிக்க முயற்சி செய்வதாக கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் மீது மணிப்பூர் பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உமாசங்கர்

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சோம்ரின் வாஷினோ. மணிப்பூரை சேர்ந்த இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நான் பேமின் ஆப்ரோ டேவிட் என்பவரைக் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். இது எங்கள் குடும்பத்தினருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து என் சகோதரி, ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். உமாசங்கர் என்னை கணவரை விட்டுவிட்டுப் பெற்றோருடன் போகச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். தொடர் தொல்லைகளினால், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

பின்னர் என்னையும் என் கணவரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் ஒருநாள் முழுவதும் வைத்திருந்தனர். விசாரணை நடத்துவதாக அடிக்கடி என் வீட்டுக்குப் பலர் வந்து சென்றனர். காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு நானும் என் கணவரும் ஆஜராக வேண்டும் எனக் கூறியதன் பேரில் ஒருநாள் இருவரும் சென்றிருந்தோம். அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கர் அனுப்பியதாக சில மதபோதகர்கள் வந்து உனக்குள் தீய சக்தி உள்ளது. அதை விரட்ட வேண்டும் எனக் கூறினார்கள். மகளிர் ஆணையமும் என்னை மருத்துவப் பரிசோதனைக்குப் போகச் சொல்கிறது. எனது கணவரிடமிருந்து என்னைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி நடக்கிறது. எனவே, என்னையும் என் கணவரையும் காவல்துறையினர் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவு பிறக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ், இது தொடர்பாக சென்னை போலீஸ் ஆணையர் மற்றும் வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!