`மாவட்டத்துக்கு எதிரா அரசியல் செய்றியா?' - முல்லைவேந்தன் ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனுக்குத் திருமண விழாவில் சால்வை அணிவித்த தி.மு.க நிர்வாகி மீது தாக்குதல் நடந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைவேந்தன்

தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கடந்த மாதம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்
மீண்டும் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் தொண்டர்கள். இந்த நிலையில், தி.மு.க வர்த்தக அணியின் மாவட்ட துணைச் செயலாளர் துரை இல்லத் திருமணத்தில் கலந்துகொள்ள வந்தார் முல்லைவேந்தன். அவருக்குத் திருமண விழா மேடையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான வை.பிரகாஷ், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ முருகன் மற்றும் கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் நவாப் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிஇதில், கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் மட்டும் முல்லைவேந்தனுக்கு எதிராக, `` யாரும் அவருக்கு வரவேற்பு கொடுக்கக் கூடாது'' என ஆதரவாளர்களிடம் கூறியிருந்தார். இதையும் மீறி கிருஷ்ணகிரி நகர வர்த்தக அணி துணைச் செயலாளர் சமீயுல்லா மற்றும் அன்சர் பாட்ஷா ஆகியோர் முல்லைவேந்தனுக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த செங்குட்டுவன் நேற்று அவர்கள் இருவரையும் கட்சி அலுவலகத்துக்கு அழைத்து, ``உங்களுக்குப் பதவி போட்டது நான், சால்வை போடுவது முல்லைவேந்தனுக்கா?' எனக் கூறி ஆத்திரப்பட்டிருக்கிறார்.

இதன்பிறகும், சமீயுல்லாவைப் பின்தொடர்ந்த அஸ்லாம், ரியாஸ், அப்பு, வெங்கடேசன், பப்லு ஆகிய ஐந்து பேரும், ``மாவட்டத்துக்கு எதிரா அரசியல் செய்றீயா...?'' என்று கேட்டுக் கொண்டே அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை எதிர்பார்க்காத சமீயுல்லா, `` அண்ணே... எல்லோரும் சால்வை போட்டார்கள். நானும் சால்வை போட்டுவிட்டேன். என்னை விட்டுங்க' எனக் கெஞ்சியும் விடாமல் விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமீயுல்லாவுக்குத் தலையில் 16 தையல் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி நகர காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!