இதுவரை மூன்று யானைகள் பலி... தேனி வனத்துக்குள் தொங்கும் மரணக் கம்பி! | 3 elephants died in theni forest due to electric wires

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (06/09/2018)

கடைசி தொடர்பு:14:10 (06/09/2018)

இதுவரை மூன்று யானைகள் பலி... தேனி வனத்துக்குள் தொங்கும் மரணக் கம்பி!

தேனி வனப்பகுதியில் தொங்கும் ஒரே ஓர் உயர்மின் அழுத்தக்கம்பி இதுவரைக்கும் மூன்று யானைகளை பலிகொண்டுள்ளது.

இதுவரை மூன்று யானைகள் பலி... தேனி வனத்துக்குள் தொங்கும் மரணக் கம்பி!

மேகமலை வனப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் மீண்டும் ஒரு யானை பலியாகியுள்ளது. இச்சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதிக்கு உட்பட்ட கம்பம் கிழக்கு வனச்சரகத்தில் அமைந்துள்ளது `டவர்மேடு’ என்ற பகுதி. வெண்ணியாறு கிழக்குச் சரகமும், மேற்குச் சரகமும் இணையும் இடத்தில் உள்ள டவர்மேடு பகுதியில், கடந்த ஜூன் 18-ம் தேதி குட்டியுடன் பெண் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானை எப்படி இறந்தது என ஆய்வு செய்தனர். அப்போது, வனத்துக்குள் தாழ்வாகச் செல்லும் உயர்மின் அழுத்தக் கம்பியில் யானை உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்து பெண் யானையும், அதன் அருகில் நின்றுகொண்டிருந்த குட்டி யானையும் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மின்சாரக் கம்பத்தின் கீழ்தான் அதன் உடலும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மின் வாரியத்தில் விவரம் கேட்ட வனத் துறை, அதை உறுதிசெய்தது.

இந்நிலையில் நேற்று அதே இடத்தில் யானை இறந்துகிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் ஒன்பது வயது மதிக்கத்தக்கப் பெண் யானையின் சடலத்தைக் கைப்பற்றினர். தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியை எதிர்பாராத விதமாக யானை தனது துதிக்கையால் பிடித்துள்ளது. இதனால் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே குட்டியுடன் பெண் யானை பலியான நிலையில், மீண்டும் அதே இடத்தில் பெண் யானை பலியான சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Elephant

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதி வழியாகத் திறந்துவிடப்படும் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக லோயர் கேம்ப் பகுதியில் புனல் மின் நிலையம் அமைந்துள்ளது. பெரியாறு மின் நிலையம் என்ற பெயர் கொண்ட இந்தப் புனல் மின் நிலையத்திலிருந்து 180 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரம், லோயர்கேம்ப்பிலிருந்து கயந்தாறு செல்கிறது. செல்லும் வழியில்தான் யானை இறந்த டவர்மேடு பகுதி உள்ளது. இந்த மின்சாரம் சென்ற உயர் மின்அழுத்தக் கம்பிதான் இதுவரை மூன்று யானைகளைப் பலி வாங்கியிருக்கிறது.

மின்சாரம் தாக்கி இதுவரை குட்டி உட்பட மூன்று யானைகள் இறந்திருப்பது பற்றி வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``கடந்த ஜூலை மாதம் நடந்த விபத்துக்குப் பிறகு, வனத்துக்குள் செல்லும் மின் கம்பிகளை ஆய்வு செய்ய வேண்டும். தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உடனே சரி செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்குக் கடிதம் எழுதினோம். அதற்கு இன்று வரை பதில் இல்லை. எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்கியிருந்தால் மீண்டும் ஓர் உயிர் பறிபோயிருக்காது!” என்றார்.

லட்சக்கணக்கில் செலவாகும்!

இது தொடர்பாக மின்சார வாரியத்தின் மதுரை மண்டலச் செயற்பொறியாளர் (ஆபரேஷன்) அவர்களிடம் கேட்ட போது, ``யானை இறந்தது நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்(!!!). வனத்துறையிடமிருந்து கடிதம் வந்தது. அதுதொடர்பாக வனத்துக்குள் செல்லும் மின் கம்பிகள் எங்கெங்கு தாழ்வாகச் சென்றிருக்கிறது என ஆய்வுசெய்து சரி செய்யப்படும். இதைச் சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும். விரைவில் சரிசெய்யப்படும்” என்றார்.

உயிரிழந்த யானை

"இந்திய யானைகள், IUCN (International Union for Conservation of Nature) பட்டியலில் அழியும் இனங்களின் வரிசையில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய அரசு, யானைகளைப் பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையைப் பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், அரசுத் துறை ஒன்றின் அலட்சியத்தால் மூன்று யானைகள் பலியாகியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். வனத்துக்குள் செல்லும் மரணக் கம்பிகளை உடனே சரி செய்ய வேண்டும்” என்கிறார்கள் சூழலியலாளர்கள்.


டிரெண்டிங் @ விகடன்