வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (06/09/2018)

கடைசி தொடர்பு:13:33 (06/09/2018)

`அவர் சொன்னதைச் செய்தேன்; வருமானம் வரல, பணம்தான் போச்சு'- மந்திரவாதியை எரித்துக்கொன்ற பெண் வாக்குமூலம்

 மந்திரவாதி பாபு பாய்  கொலைச் செய்த தாஜ்

``என் உடம்பில் ஆவி இருப்பதாகக்கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணத்தை பெற்று ஏமாற்றியதால் மந்திரவாதியைக் கொன்றேன்'' என்று கைதான தாஜ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை முதலாவது தெருவைச் சேர்ந்த சையத் பஸ்ருதீன் என்கிற பாபுபாய். இவருக்கு வயது 62. இவர், திருவல்லிக்கேணியில் உள்ள வணிகவளாகத்தில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து, 40 ஆண்டுகளாக ஓதுதல் வேலை செய்துவந்தார். சம்பவத்தன்று பர்தா அணிந்த 10 பெண்கள், தங்களின் பிரச்னைகளை பாபு பாயிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது, பெண்கள் கூட்டத்திலிருந்து மர்மப் பொருள் ஒன்று பாபு பாய் மீது வீசப்பட்டது. இதனால், அவரின் உடலில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய பாபு பாய் பரிதாபமாக இறந்தார்.  இந்தச் சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். பர்தா அணிந்த இளம்பெண்தான் பாபுபாயை கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் தாஜ் என்ற இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜாம்பஜாரைச் சேர்ந்த தாஜின் கணவர் பாஷா, ராயப்பேட்டையில் பர்னீச்சர் கடை நடத்திவருகிறார். தொழிலில் அவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதனால், பாஷா மற்றும் அவரின் மனைவி தாஜ் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்,  பாபுபாயை சந்தித்துள்ளனர். அப்போது பாபு பாய், கூறியதை அவர்கள் செய்துள்ளனர். அதன்பிறகும் தொழில் வளர்ச்சியடைவில்லை. அதுகுறித்து பாபு பாயிடம் கேட்டதற்கு, தாஜின் உடலில் ஆவி இருக்கிறது. அதுதான் உங்களுடைய பிசினஸ் வளர்ச்சியடையாததற்கு காரணம் என்று கூறியுள்ளார். அதற்கு சில பரிகாரியங்களை பாபுபாய் செய்துள்ளார். அதன்பிறகும் குறிப்பிடும் வகையில் தொழில் வளர்ச்சியடையவில்லை. இந்த ஆத்திரத்தில்தான் பாபு பாயை தாஜ், கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று பெட்ராலை வாங்கிய தாஜ், அதை மறைத்து வைத்துக்கொண்டு பாபு பாயைச் சந்திக்கச் சென்றுள்ளார். திடீரென பெட்ரோலை அவர் மீது ஊற்றி, தீ வைத்துள்ளார். இதனால்தான் பாபு பாய் உடல் கருகி இறந்துள்ளார்" என்றனர். 

போலீஸாரிடம் தாஜ் அளித்த வாக்குமூலத்தில், ``பிசினஸை விரிவுபடுத்தத்தான் பாபு பாயைச் சந்திக்க கணவருடன் சென்றேன். ஒவ்வொரு முறையும் அவரைச் சந்திக்க 1,000 ரூபாய் கட்டணம். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக அவரை பல தடவைச் சந்தித்துள்ளேன். அவர் கூறியதைப் போல நாங்களும் செய்தோம். ஆனால், பிசினஸில் எதிர்பார்த்த வருமானம் இல்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, என் உடம்பில் ஆவி இருப்பதாகக் கூறினார். அதற்கும் சில பரிகாரங்களைச் செய்தோம். ஆனால், பலனில்லை. அவரிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து ஏமாந்துவிட்டோம். இந்த ஆத்திரத்தில்தான் பாபு பாயைக் கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று பெட்ரோலை எடுத்துக்கொண்டுச் சென்ற நான், `என் உடம்பிலா ஆவி இருக்கிறது, இப்போது பார் உன்னை நான் என்ன செய்கிறேன்' என்று கூறிக்கொண்டு பாபு பாயின் உடம்பில் பெட்ரோலை ஊற்றினேன். அவர் சுதாரிப்பதற்குள் தீக்குச்சியை கொளுத்திப்போட்டேன். அவரின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அந்தக் கூட்டத்தில் நானும் தப்பிவிட்டேன்.  வீட்டுக்கு வந்த நான், மனநலம் பாதிக்கப்பட்டது போல நடித்தேன். இதனால், என்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், என்னைப் பரிசோதித்த டாக்டர்கள், உண்மையைக் கண்டுபிடித்துவிட்டனர். அதன்பிறகு போலீஸார் என்னைக் கைதுசெய்துவிட்டனர்" என்று கூறியிருக்கிறார்.