வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (06/09/2018)

கடைசி தொடர்பு:15:00 (06/09/2018)

சத்தமில்லாமல் உயர்ந்த டீசல் விலை! - மக்களை வதைக்கும் விலை உயர்வு

பெட்ரோல் விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். `கச்சா  எண்ணெய் விலை உயர்வைவிட மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளால்தான் எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் போகிறது' என வேதனைப்படுகின்றனர் வாகன உரிமையாளர்கள். 

டீசல்

இந்தியாவில் அரசியல் கட்சிகள் முதல் ஊடகங்கள் வரை பெட்ரோல் விலை உயர்வைப் பெரிதும் மையப்படுத்தி பேசுகின்றனர். உண்மையில் பெட்ரோல் விலையைவிட பொதுமக்களுக்கு அதிக பாதிப்பைத் தரக்கூடியது டீசல் விலை உயர்வுதான். பொதுவாக பெட்ரோலைவிட டீசல் விலை குறைவாகத்தான் இருக்கும். இவை இரண்டும் இடையில் லிட்டருக்கு சுமார் 10 - 15 ரூபாய் வித்தியாசம் இருப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாகக் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாகப் பெட்ரோல், டீசல் உயர்வு கணிசமாக உயர்ந்து வருகிறது.

இன்றைய தேதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.62 காசுகளாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.61 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கான வித்தியாசம் 7 ரூபாய்தான். பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழங்கள், பால், கேஸ் சிலிண்டர்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தும் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. சிறியது முதல் பெரிய அளவிலான சரக்கு வாகனங்கள் இதற்கு பயன்படுகிறது. ஓட்டுநர் கூலி, வண்டி தேய்மானம், எரிபொருள் பயன்பாடு இவை அனைத்தும் மையப்படுத்திதான் வண்டிக்கான வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் கூடுதலாக சுங்கச்சாவடி கட்டணம் இவற்றைக் கணக்கிட்டு வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்தப் பொருள்கள் அனைத்தும் விற்பனைக்கு வரும்போது வாங்கிய விலை + செலவு (வண்டி வாடகை, சுங்கக்கட்டணம், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலி) + லாபம் இவற்றை மனதில் கொண்டுதான் பொருளுக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது உற்பத்தியாளர்களிடமிருந்து நுகர்வோர் கைக்கு வரும்போது பலமடங்கு அதிகரித்து காணப்படுகிறது. இப்போதும் பாதிக்கப்படுவது மக்கள்தான். திடீரென உயரும் பருப்பு விலை, தங்கம் விலைக்கு விற்கும் தக்காளிகள் என மக்களுக்கு அதிகப்படியாக சுமைகள் ஏற்பட்டுள்ளன.

வாகன உரிமையாளர்களிடம் பேசினோம். “கச்சா எண்ணெய் விலை உயர்வைவிட மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளால்தான் எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் போகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால்தான் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்துவிட்டு மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தினால் மீண்டும் அதே நிலைதான் நீடிக்கும். எரிபொருள் விலையை மாநில அரசுகள் ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வரச் சம்மதித்தாலும் மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு லோடு ஏற்றிவந்தால் வழியில் 7 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதற்கே 2,600 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. மோட்டார் தொழில் எல்லாம் முன்புபோல் இல்லை” என்கின்றனர் ஆதங்கத்துடன்.