`மறைமுகமாகச் செயல்படுத்த முயல்கிறது மத்திய அரசு’: சமூக ஆர்வலர்களின் மீத்தேன் அலெர்ட்

எரிபொருள்கள் எடுக்கும் கொள்கைகளில் மத்திய அரசு தற்போது சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களை மறைமுகமாகச் செயல்படுத்தக்கூடிய ஆபத்தான சூழல் உருவாகியுள்ளதாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆலோசகர் சேதுராமன் எச்சரிக்கை செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சேதுராமன், ‘எரிபொருள்கள் எடுக்கும் பணிகளில் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, திறந்தவெளி அனுமதி என்ற புதிய கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. திரவ மற்றும் வாயு வடிவிலான அனைத்து வகையான எரிபொருள்களையும் பெட்ரோலியம் என்றே அழைக்கலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது. இதற்கு முன்பு எரிபொருள்கள் எடுக்க ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்திவிட்டது. திறந்தவெளி அனுமதி கொள்கையின் அடிப்படையில் பெட்ரோலியம் எடுக்க முதல்கட்டமாகத் தமிழ்நாட்டில் 3 வட்டாரங்கள் உட்பட மொத்தம் 55 வட்டாரங்களுக்கு டெண்டர் விடப்பட்டன. இதற்கு 110 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அவற்றைப் பரிசீலனை செய்து கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மத்திய அரசு சில நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தது. இதை உறுதிப்படுத்தி டெண்டரில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிதான் தலைமையில் இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 2 வட்டாரங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு வட்டாரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் உரிமம் வழங்குகிறார்கள். தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களுக்கான முன்னோட்டமாகவே இதைக் கருதுகிறோம். இதனால் மண் வளம், நீர்வளம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு புதிய கொள்கையைக் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.   

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!