வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:40 (06/09/2018)

`அவதூறாகப் பேசுகிறார்...’ நடிகர் விசு மீது புகார் அளித்த சுப.உதயகுமார்!

ன்னை அவதூறாகப் பேசும் நடிகர் விசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பச்சை தமிழகம் கட்சி நிறுவனர் உதயகுமார் புகார் அளித்தார்.

சுப உதயகுமார்

நாகர்கோவிலில் பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியுமான உதயகுமார் இன்று நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "நடிகர் விசு தன்னை விமர்சித்தும் அவதூறாகவும் பல்வேறு மேடை நிகழ்சிகளில் பேசி வருகிறார். அவரது பேச்சு சமுதாயத்தில் மத பிரச்னைகளை விதிப்பதுடன், சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயலாக உள்ளது. இவரின் இந்தப் பேச்சால் தன்மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தவும் வழிவகை செய்வதுடன் தன் குடும்பத்தினருக்கும் பாது காப்பாற்ற நிலை உள்ளது. ஆகையால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "குட்கா ஊழல் வழக்கில் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் விசு

தமிழக மக்களைக் கடுகளவும் மதிக்காமல் மூன்று மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதைத் தமிழகத்தில் இருக்கும் 8 கோடி தமிழர்களும் எதிர்ப்பார்கள். தமிழக மக்களை மதிக்க மாட்டோம், தமிழக காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனம் ஆக்கியே தீருவோம் என மத்திய மாநில அரசுகள் முயன்று வருகிறது. பல ஆயிரம் கோடி ஏமாற்றியவர்கள், தேசத்துக்கு துரோகம் செய்தவர்களின் பாஸ்போர்ட்களை பறிக்க முடியாத கையாலாகாத மத்திய அரசு, பா.ஜ.க வின் பாசிச கொள்கை ஒழிக என கூறியதற்காக மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை பறிக்க முயல்கிறது. மாணவி சோபியா பாஸ்போர்ட்டை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கொடுக்காமல் நீதிமன்றத்தை நாட வேண்டும்" என்றார்.