வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (06/09/2018)

கடைசி தொடர்பு:16:23 (06/09/2018)

`குட்காவில் எப்படியெல்லாம் பணம் கைமாறியது?’ - அதிகாரிகளின் வாக்குமூலத்தால் அச்சத்தில் ஆளுங்கட்சியினர்

குட்கா

குட்கா விற்பனையில் எப்படியெல்லாம் பணம் கைமாறியது குறித்து சி.பி.ஐ-யிடம் சிக்கிய தரகர்களிடமும் பணம்வாங்கிய அதிகாரிகளிடமும் விசாரணை நடந்துவருகிறது. இதனால் காவல்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

குட்கா விவகாரம் ஆளுங்கட்சிக்கும் சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது. தமிழகம் முழுவதும் 35 இடங்களில் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, குட்கா விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிலருடைய வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் சி.பி.ஐ அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வழக்கின் துருப்புச் சீட்டாக உள்ள மாதவ ராவ்வின் டைரி மற்றும் அவரின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு விசாரணை அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. குட்கா நிறுவனத்துக்கும் காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, கலால்துறை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்குத் தரகர்களாகச் சிலர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்த சி.பி.ஐ அதிகாரிகள், அதில் சிலரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். சோதனையை முடித்த அதிகாரிகள், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் மற்றும் அதிகாரிகள் உமாசங்கர், பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதோடு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளனர். இதனால், அடுத்து யார் மீது சி.பி.ஐ-யின் நடவடிக்கை பாயும் என்ற கலக்கத்தில் ஐ.பி.எஸ், தமிழக காவல்துறை அதிகாரிகள், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 

தரகர்களின் வாக்குமூலம் 

இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``தரகர்கள் ராஜேஷ், நந்தகுமார் மற்றும் 5 தரகர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. மாதவராவ்விடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகத்தான் அவர்களிடம் விசாரித்து வருகிறோம். தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் தடையின்றி விற்கப்பட்டுள்ளன. அதைத் தடுக்க வேண்டியவர்களுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள், அமைச்சர், முன்னாள் அமைச்சர்  என சிலரின் பெயர்கள் உள்ளன. மேலும், யாருக்கெல்லாம் எவ்வளவு தொகை கமிஷனாகக் கொடுக்கப்பட்டது என்ற விவரமும் அந்த டைரியில் உள்ளது. 

சோதனை நடத்தப்பட்ட இடங்களிலிருந்து வழக்கு தேவையான ஆவணங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த வழக்கில் காவல்துறையினர் மட்டுமல்லாமல், கலால், உணவு பாதுகாப்புத்துறையினருக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளோம்.  

 குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்  ஜார்ஜ்

சில தினங்களுக்கு முன்பு செங்குன்றத்தில் உள்ள குட்கா நிறுவனத்தின் குடோனில் சோதனை நடத்தி சீல் வைத்தோம். அதன் தொடர்ச்சியாகக் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரதி பாண்டியன் மற்றும் உமாசங்கர் ஆகிய நான்கு பேரை இன்று கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். 

``குட்கா வழக்குக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், தலைமைச் செயலகத்திலே மாயமாகின. மாயமான ஆவணங்களின் நகல்களை வருமானவரித் துறையினரிடமிருந்து பெற்றுள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, காவல்துறையில் உயர்பதவியிலிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில்தான் வழக்கின் விசாரணை நடந்துவருகிறது. 

முன்னாள் அமைச்சருக்கு உதவிய வணிகவரித்துறை அதிகாரிகள் 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவர்தான் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருள்களுக்கு டீலராக இருந்துள்ளார். இதனால்தான் அந்த முன்னாள் அமைச்சர், உறவினர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினோம். டீலராக இருந்த அமைச்சரின் உறவினர் மூலம் செய்யப்பட்ட சப்ளை குறித்த விவரங்களைச் சேகரித்துள்ளோம். மாதவராவ், ஒரு குட்கா நிறுவனத்தின் உரிமையாளர். ஆனால், அவரைப்போல இன்னும் சில நிறுவனங்களும் உள்ளன. அவர்களின் தயாரிப்புப் பொருள்கள் தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சரின் உறவினர் மூலம் விற்கப்பட்டுள்ளன. அதற்கும் கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் உள்ள உயரதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில், அந்த முன்னாள் அமைச்சரின் உறவினருக்கு ஆதரவாக வணிகவரித்துறை உயரதிகாரிகள் தற்போதுவரை செயல்பட்டுவந்துள்ளதாகத் தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதில், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட ஒருவரின் செயல்பாடு குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் தொடர்பாக எங்களுக்குக் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளோம். 

அதிகாரமிக்க  5 அதிகாரிகள்

நீண்டநாள் கிடப்பில் போடப்பட்ட  குட்கா வழக்கை சி.பி.ஐ தூசி தட்டி எடுத்துள்ளது. மேலும், வழக்கை விசாரிக்க டெல்லியில் உள்ள உயரதிகாரிகள் கொண்ட தனி டீம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த டீமில் உள்ளவர்களுக்கு மேலிடத்திலிருந்து வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தவித தகவல்களையும் வெளியில் தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, வழக்கு தொடர்பாக போனில் யாரிடமும் பேசக்கூடாது. விசாரிக்கும் நபரிடமிருந்து பெறப்படும் தகவல்கள் டீமில் உள்ள 5 உயரதிகாரிகளைத் தவிர வேறுயாருக்கும் தெரிவிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு பணி என்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தரகர்களை விசாரிக்கும் டீம், அவர்களின் முழு விவரங்களை சேகரித்து 5 பேர் கொண்ட உயரதிகாரிகள் டீமிடம் அந்த ஃபைலை கொடுக்க வேண்டும். குட்கா உரிமையாளரிடம் விசாரணை நடத்தும் அதிகாரிகள் அந்த ஃபைலயும் உயரதிகாரிகள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிக்கப்படும் விசாரணை ஃபைல்கள் அடிப்படையில்தான் அடுத்தடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. 

 எப்படியெல்லாம் பணம் கைமாறியது?

குட்கா நிறுவன உரிமையாளரிடமிருந்து இந்த வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகளுக்கு எப்படியெல்லாம் பணம் கைமாறியது என்பதை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். வருமானவரித்துறையினர் நடத்திய விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.  உரிமையாளர் மாதவராவின் சொத்து பட்டியல், அவரின் பினாமிகள் குறித்த விவரங்களை சேகரித்த சி.பி.ஐ, வழக்கில் தொடர்புடைய ஐ.பி.எஸ், அதிகாரிகளின் முழு பயோடேட்டாக்களையும் ஃபைலாக வைத்துள்ளனர். கமிஷன் தொகை மூலம் கிழக்குக் கடற்கரை சாலையில் இடங்கள் வாங்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் விசுவாசமாக இருந்துள்ளனர். போயஸ் கார்டனிலிருந்து அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் வரை குட்கா விவகாரத்தில் தொடர்பு இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" என்கின்றனர் அதிகாரிகள்.