வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (06/09/2018)

கடைசி தொடர்பு:19:14 (06/09/2018)

`என்னை நிர்பந்தித்தால் இன்னொரு டி.டி.வி-தான்' - விஜயபாஸ்கரின் பதிலால் அதிர்ந்த முதல்வர் எடப்பாடி

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.கே.ஆர், ஜார்ஜ்

சி.பி.ஐ சோதனைக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னுடைய முடிவை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்  ஜார்ஜ் , டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடந்த பிறகு நேற்றிரவு அமைச்சர் விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், `சூழ்ச்சிகளை சட்டத்தின் மூலம் எதிர்கொண்டு மீண்டு வருவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பின்போது, பதவி விலகுவது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதை இருதரப்பினரும்  மறுத்துள்ளனர். முதல்வர் கூறியதை அமைச்சர் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கிவருகிறார். அவரின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை, சி.பி.ஐ சோதனை நடத்தப்பட்டது. வருமானவரித்துறை சோதனையில் சிக்கியபோதே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். சி.பி.ஐ சோதனைக்குப் பிறகும் அதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன. இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்போது, சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் உங்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்தால் என்ற கேள்வியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், எந்தச் சோதனையும் எனக்கு சோதனையாக மாறாது. ஏனெனில், பல இக்கட்டான சூழ்நிலைகளை கடந்துவந்துவிட்டேன். என்னை பதவி விலக நிர்பந்தித்தால் இன்னொரு டி.டி.வி.தினகரனாக நான் மாற வேண்டியதுவரும் என்று விஜயபாஸ்கர் சொல்லியிருக்கிறார். அதை நான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, பதவி விலகுவது குறித்து முதல்வரும் எதுவும் பேசவில்லை" என்றனர். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டாேம். ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்குப் பிறகு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் முதல்வரைச் சந்தித்துள்ளார். அவரிடமும் சி.பி.ஐ சோதனை, குட்கா வழக்கு குறித்து முதல்வர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு, இந்த வழக்கை  தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவின் வாக்குமூலம், டைரி எல்லாம் உங்களுக்கும் ஜார்ஜுக்கும் எதிராகவே உள்ளது. தற்போது ஜார்ஜ், பதவியில் இல்லை. ஆனால், நீங்கள் உயர்பதவியில் இரண்டாண்டுகள் நீட்டிப்பில் இருக்கிறீர்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். சட்ட நிபுணர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், ஆலோசித்து பதில் சொல்கிறேன் என்றும் முதல்வர் சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு, டி.கே.ராஜேந்திரன் கடும் அப்செட்டில் இருந்துவருகிறார். சி.பி.ஐ அதிகாரிகளின் பார்வை தன்மீது உள்ளதால் எந்தக் காரியத்தையும் யோசித்தே முடிவெடுப்பதாக அவருக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

சி.பி.ஐ சோதனையின்போது, டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் வீட்டிலிருந்து எந்தவித முக்கிய ஆவணங்களும் சிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் ஓரளவு மனநிம்மதியாக இருந்தாலும், மாதவராவ், தரகர்கள், அதிகாரிகள் ஆகியோரின் வாக்குமூலம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடக்கூடாது என்ற கவலையில் காக்கிகள் உள்ளனர். குட்கா நிறுவனத்தின் குடோன் இருந்த பகுதியில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளில் சிலர் தப்பியுள்ளனர். அவர்களில் ஒருவர், துணை கமிஷனராக சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றுகிறார். அவர் தப்பியது எப்படி என்ற பேச்சு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது. அதே நேரத்தில் குட்கா வழக்கில் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு சோதனைக்குப் பிறகு அடுத்தடுத்த சிக்கல்கள் வரவுள்ளது. சி.பி.ஐ நடவடிக்கைக்கு முன், அந்த அதிகாரிகள் மீது முன்எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கலாமா என்ற ஆலோசனையில் காவல்துறை உயரதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசின் சிக்னலுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். 

டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனின் பதவி, குட்கா வழக்கால் ஆட்டம் கண்டுள்ளதால் அவரின் பதவியைக் குறி வைத்து டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள சீனியர்கள் போட்டிபோட தொடங்கியுள்ளனர். திரிபாதியும் மகேந்திரனும் ரேஸில் இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால், அமைதியாக ஜாங்கிட் காயை நகர்த்திவருகிறார். இவர்களில் திரிபாதிக்கே டி.ஜி.பி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.