வெளியிடப்பட்ட நேரம்: 17:19 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:19 (06/09/2018)

`ஒரு வாரத்துக்குள் என் மகன் அறிவு என் கையில் இருப்பான்' - நம்பிக்கையுடன் அற்புதம்மாள்

‘ஒரு வாரத்துக்குள் என் மகன் என்னிடம் வருவான் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ எனப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை 1999-ம் ஆண்டு குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வராக இருந்த ஆட்சிக் காலத்தில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலைசெய்வது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாள்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலைசெய்யும் எனவும் கூறியிருந்தார். 

ஆனால், இவர்களின் விடுதலையை மறுத்த மத்திய அரசு (அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்), தமிழக அரசின் தீர்மானத்தை எதிர்த்து 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இதனிடையே. ``தாங்கள் 20 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளோம். எனவே, தங்களை விடுதலைசெய்ய வேண்டும்'' என வலியுறுத்தி குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரும் தமிழக அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் கேட்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில், இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் ஆவணத்தை  வழங்கியது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றது. 

இது தொடர்பான வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. இது தொடர்பாகத் தமிழக ஆளுநருக்கு, அரசு பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டது. 

அற்புதம்மாள்

உத்தரவுக்குப் பிறகு நம்மிடம் பேசிய பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், “இன்று வந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, விடுதலைசெய்வது தொடர்பாக அறிவிக்க வேண்டும். இத்தனை நாள்களாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என மாநில அரசு கூறிவந்தது. ஆனால், இன்று என் மகனை விடுதலைசெய்யும் உரிமையை உச்ச நீதிமன்றமே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. நாளை நானும் எங்கள் வழக்கறிஞரும் முதல்வரை நேரில் சந்தித்து இது தொடர்பாகக் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஒரு வாரத்துக்குள் என் மகன் அறிவு என் கையில் இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். உலகில் உள்ள பலரும் எங்களுக்காகக் குரல் கொடுத்தனர். முகம் தெரியாதவர்கள்கூட என் மகன் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைவருக்கும் மிக்க நன்றி. இது தொடர்பாக விரைவில் தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். அரசின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க வேண்டும். விரைவில் என் மகனை விடுதலைசெய்ய வேண்டும்” என உருக்கமாகப் பேசினார்.