வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:35 (06/09/2018)

குட்கா ஊழலில் அடுத்தடுத்து கைதாகும் அரசு அதிகாரிகள்! சிக்கிக்கொண்ட பங்குதாரர்

குட்கா ஊழல் விவகாரத்தில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், உமா சங்கர், அரசு அதிகாரிகள் இருவர், குட்கா குடோனின் பங்குதாரர் சீனிவாசராவ் உள்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட அதிகாரிகள்

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைசெய்ய டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்டுவந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் லஞ்சம் வாங்கினார் எனப் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, நேற்று சென்னை, பெங்களூரு, திருவள்ளூர் உள்ளிட்ட பல ஊர்களில் 35 இடங்களில் ரெய்டு நடைபெற்றது. நேற்று ரெய்டு நிறைவடைந்த நிலையில், இன்று சிபிஐ கைதுசெய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, தரகர்களாகச் செயல்பட்ட இருவரைக் கைதுசெய்திருந்தது. இதையடுத்து, தற்போது குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், உமா சங்கர், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், கலால்வரித் துறை அதிகாரி எல்.கே.பாண்டியன் ஆகியோரை சிபிஐ கைதுசெய்துள்ளது. மேலும், குட்கா குடோனின் மற்றொரு பங்குதாரரான சீனிவாசராவையும் சிபிஐ தற்போது கைது செய்திருக்கிறது.