வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (06/09/2018)

கடைசி தொடர்பு:18:20 (06/09/2018)

'ஆளுநருக்கு வேறு வழியில்லை' - ஏழு பேர் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் கட்சிகள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜூவ்காந்தி வழக்கு

 

ராஜீவ் காந்தி கொலை வழக்குகுறித்து, உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலைசெய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் ஜெயகுமார், ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்ததும், விடுதலை செய்வதுகுறித்து முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’' என்று வலியுறுத்தியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, `உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி, 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை வழங்க வேண்டும். இப்பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும். இப்பிரச்னையில் காலதாமதமின்றி உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என்கிறார்.

இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, `ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். இதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், ` உடனடியாக அமைச்சரவையை கூட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதை ஏற்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டுளார்.