வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (06/09/2018)

கடைசி தொடர்பு:18:05 (06/09/2018)

ரூ.100 கோடி மோசடியில் கட்டுமான நிறுவனம்? - குற்றப்பிரிவில் குமுறிய பொதுமக்கள்!

வீடு கட்டித்தருவதாகப் பணம் பெற்று ஏமாற்றிய பி டாட் ஜி நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 


சென்னை வளசரவாக்கத்தில் செயல்பட்டுவரும் பி டாட் ஜி என்ற கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் பிரபாகர் ரெட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியிலுள்ள ஸ்வர்ணலதா கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான 63 சென்ட் மற்றும் 3,036 சதுரடி நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு, அவரோடு 26-05-2014-அன்று ஒப்பந்தம் போட்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, 33  சதவிகித நிலம் மற்றும் கட்டடம், ஸ்வர்ணலதா கந்தசாமிக்கு உரிமையானது.

அதன்படி, அந்த இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்ட 76 வீடுகளில் 22 வீடுகள், ஸ்வர்ணலாதவுக்குச் சொந்தமானது. நில உரிமையாளர்களின் பங்கிலும், கம்பெனியின் பங்கிலும்  வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்ட 39 பேருக்கும், ஒப்பந்தப்படி வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை. பி டாட் ஜி என்ற நிறுவனம், 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டாலும், 4 வருடங்கள் கடந்தும் ஒரு தளம் கூட வேலை முடியவில்லை. இதுபற்றி கேட்டால், பதில் சொல்லக்கூடிய இடத்தில் யாரும் இல்லை. அதையடுத்து, அந்த நிறுவனம்மீது நொடிந்துபோனவர் (இன்சொல்வேன்சி) என்று மனு போடப்பட்டு, தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து 13-7-2018 அன்று நடவடிக்கை எடுக்கத் தொடங்கின.

எனினும் அதை மறைத்து, 24-07-2018 அன்று மேற்கூறிய உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து, தான் வெகுவிரைவில் இந்தக் கட்டடத்தை முடித்துத் தருவதாகவும், அதற்கு எல்லோரும் மீதம் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் நிறுவனம் சார்பில் இ-மெயில் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், இதுதொடர்பாகப் புகார் அளித்துள்ள வாடிக்கையாளர்களை நிறுவன உரிமையாளர் பிரபாகர் ரெட்டி அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். எனவே, பிரபாகர் ரெட்டி மீதும் அவருடைய கூட்டாளிகள் மீதும் பண மோசடி, நம்பிக்கைத் துரோகம், கூட்டு சதி, கொலை மிரட்டல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு, எங்களுடைய பணத்தையும் பெற்று தர வேண்டும். 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்பதற்கு, பி டாட் ஜி நிறுவனத்தின் இணைய தளத்திலுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தொடர்பில் வரவில்லை. இந்த விவகாரத்தில் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டால் உரிய பரிசீலனைக்குப் பின்னர் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.