தமிழிசையின் புகாரால் மாணவி ஷோபியாவின் எதிர்காலம் பாதிக்கப்படுமா? | What will happen to Sophia after this issue?

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (06/09/2018)

கடைசி தொடர்பு:18:25 (06/09/2018)

தமிழிசையின் புகாரால் மாணவி ஷோபியாவின் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

மாணவி ஷோபியாவின் எதிர்காலம் குறித்து மனித ஆர்வலர்கள் சொல்லும் கட்டுரை...

தமிழிசையின் புகாரால் மாணவி ஷோபியாவின் எதிர்காலம் பாதிக்கப்படுமா?

சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற விமானத்தில், `பாசிச பி.ஜே.பி. ஒழிக' என்கிற ஒற்றை வாசகத்தை, பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு எதிராகப் பேசிய மாணவி ஷோபியா கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஷோபியாவின் கைது, அதைத் தொடர்ந்து அவரின் செல்போன் சிம்கார்டு முடக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட ஷோபியா பற்றிய செய்திதான் தமிழகத்தில் பெரும்பாலான ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருந்துவருகிறது.

ஷோபியா

தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர், தமிழிசை செளந்தரராஜனுக்கும், ஷோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் பின்னரே போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, ஷோபியா கைதுசெய்யப்பட்டார். இந்த விஷயம், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, ஷோபியாவுக்கு ஆதரவு பெருகிய நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பரபரப்பான சூழலில், ஷோபியாவைத் தூத்துக்குடி நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவித்தது. 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ``ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக ஷோபியாவை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைதுசெய்வீர்கள் என்றால், எத்தனை லட்சம் பேரைச் சிறையில் அடைப்பீர்கள்? நானும், சொல்கிறேன்.... பி.ஜே.பி-யின் பாசிச ஆட்சி ஒழிக'' என்று உடனடியாக ட்வீட் செய்து பரபரப்பை மேலும் அதிகப்படுத்தினார். 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ``இந்திய ஜனநாயகத்துக்கே உலைவைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், கோடிக்கணக்கான மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி மாணவி ஷோபியா கருத்துத் தெரிவித்தது, அவருடைய ஜனநாயக உரிமை. அவர்மீது காவல் துறை வழக்குப் பதிவுசெய்து, கைதுசெய்தது கண்டனத்துக்குரியதாகும்'' என்று தெரிவித்தார். 

ஷோபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட்ட விவகாரம் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஷோபியாவின் பாஸ்போர்ட்டுடன் 7-ம் தேதி (நாளை) காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அவரது தந்தைக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ஷோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமியிடம் பேசினோம். ``பாஸ்போர்ட்டுடன் நான் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று எனக்குச் சம்மன் வந்துள்ளது. ஆனால், நான் ஏற்கெனவே என் மகளின் பழைய பாஸ்போர்ட்டை விமான நிலையம் அருகேயுள்ள புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டேன். அந்த பாஸ்போர்ட்டோடு என் மகளின் விசாவும் உள்ளது. இந்த நிலையில், `புது பாஸ்போர்ட்டையும் கொண்டு வாருங்கள்' என்று போலீஸார் கேட்டிருக்கிறார்கள். அதை, ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளேன். என் மகள் வெளிநாடு செல்லக் கூடாது; அவர், உயர் கல்வியைத் தொடரக் கூடாது என்ற நோக்கத்தில்தான், போலீஸார் இப்படியெல்லாம் செயல்படுகிறார்கள்'' என்றார், மிகத் தெளிவாக.

தமிழிசை செளந்தரராஜன்

இதுதொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன், ``ஷோபியா மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் அனைத்தும் போலியானவையே. கோஷம் போட்டதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. உரக்கக் குரல் கொடுப்பதுதான் கோஷம். ஆனால், ஷோபியா அப்படிச் செய்யவில்லை. அவர் மிகவும் அமைதியான முறையில்தான் சொல்லியிருக்கிறார். அதனால், அது எப்படிக் கோஷமாகும். அப்படியே அவர் செய்தது தவறென்று வைத்துக்கொண்டாலும், விமானப் பணிப்பெண்களிடம்தான் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருக்க வேண்டும். அவர்கள், அதை உடனே விமானத்தின் கேப்டன் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பார்கள். அவர் மூலமாகத்தான் விமான நிலைய போலீஸாருக்குப் புகார் கொடுக்க வேண்டும். இதை ஏன் தமிழிசை செய்யவில்லை. அதேநேரத்தில், தூத்துக்குடி விமான நிலையத்துக்குள் தமிழிசை வந்ததும், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு ஷோபியாவை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்தே, ஷோபியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், தமிழிசை மீது, ஷோபியா தரப்பில் கொடுத்த புகாருக்கு இதுவரை எந்தப் பதிலும் இல்லை. அரசியல்வாதியை ஆதரிப்பதற்கே போலீஸார் முதல் அனைத்து அதிகாரிகளும் ஆர்வமாய் உள்ளனர். ஷோபியாவுக்கு எதிராகப் போடப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவுகள் மூன்றுமே சாதாரணமானவைதாம். அதன் அடிப்படையில், அவருடைய பாஸ்போர்ட்டை முடக்குவதற்கோ, விசா வழங்காமல் இருப்பதற்கோ சாத்தியமில்லை'' என்றார். 

ஹென்றி டிபேன்இந்த நேரத்தில், விமானத்தில் பிரச்னை செய்த எம்.பி. ஒருவரின் நிகழ்வையும் இங்கே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு மே மாதம் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், புனேயிலிருந்து டெல்லி செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவர் சென்ற விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இல்லாததால், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு எகானமி பிரிவில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியரைத் தாக்கிய நிகழ்வு, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் மத்தியிலும், ஏர் இந்தியா நிர்வாகம் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இது அப்போதே புகாராகக் கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து இந்திய விமானங்கள் கூட்டமைப்பு சார்பில், ``விமானத்தில் பிரச்னை செய்பவர்கள், மரியாதை குறைவாக நடந்துகொள்பவர்கள், பயணிகளின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் உள்ளிட்டவர்களைக் கண்டறிந்து, அவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்ய தடைவிதிக்கும் திட்டம்'' ஒன்றைக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசும் அதற்கு ஆதரவு அளித்தது. அதன்படி, விமானத்தில் பிரச்னை செய்பவர்கள் மீண்டும் விமானத்தில் பறக்கத் தடைவிதிக்கும் வகையில் `நோ - ஃப்ளைலிஸ்டை' அது அறிவித்திருந்தது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட அந்தப் பட்டியலில், ``விமான ஊழியர்களைத் திட்டுவது, அடிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் மூன்று மாதங்கள் விமானத்தில் பறப்பதற்குத் தடையும், சக பயணிகள், ஊழியர்களைத் தாக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு ஆறு மாதங்கள் விமானத்தில் பறக்கத் தடையும், விமானத்தைச் சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டுகள் விமானத்தில் பறக்கவும் தடை விதிக்கப்படும்'' என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ரவீந்திர கெய்க்வாட் போன்ற அரசியல்வாதிகளோ, முக்கியப் பிரமுகர்களோ விமானத்தில் ஊழியர்களுடன் பிரச்னையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, சம்பவம் நடந்த அடுத்த நொடியிலேயே புகார் அளிக்க வகைசெய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழிசை - ஷோபியா விவகாரத்தில் விமான கேப்டனிடம் இந்தப் பிரச்னை கொண்டுசெல்லப்படவில்லை. இந்த விஷயத்தை இருதரப்பும் பேசி சமாதானமாக முடித்திருக்கலாம். மாணவி என்பதால் ஷோபியாவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம்....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close