வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (06/09/2018)

கடைசி தொடர்பு:19:40 (06/09/2018)

இரவில் மணல் லாரி ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்! 26 வாகனங்கள் பறிமுதல்; 12 பேர் கைது

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்திய 26 லாரிகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், 12 ஓட்டுநர்களைக் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்திலிருந்து கடலூர் மாவட்டம் வழியாக உரிய ஆவணங்கள் இன்றி தொடர்ந்து லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. போலீஸார் இரவு நேரங்களில் வாகன சோதனையின்போது அவற்றை அடிக்கடி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி சாலையில் அதிக அளவில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் லாரிகள் செல்வதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்துள்ளது.

மணல் லாரிகள்

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு நெய்வேலி டி.எஸ்.பி சுந்தரவடிவேல் (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குறிஞ்சிப்பாடி ராமதாஸ், காடாம்புலியூர் குமரையா மற்றும் போலீஸார் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத மணல் லாரி ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, மணல் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்றும் அதற்கான ரசீதையும் காவல்துறையினர் கேட்டுள்ளனர். ஆனால், மணல் ரசீது இல்லாததைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றி வந்த 26 லாரிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, 12 லாரி டிரைவர்களைக் கைது செய்தனர். பறிமுதல்  செய்யப்பட்ட லாரிகள் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.