`கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கபடிக்கும் கொடுக்கணும்!’ - விஜய் சேதுபதி | vijay sethupathi participated in Tamil thalaivas jersy unveiling event

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (06/09/2018)

கடைசி தொடர்பு:17:47 (06/09/2018)

`கிரிக்கெட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கபடிக்கும் கொடுக்கணும்!’ - விஜய் சேதுபதி

கிரிக்கெட் விளையாட்டைப்போல, கபடி விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய்சேதுபதி

2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் புரோ கபடி லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான 6 வது புரோ கபடி லீக் போட்டி, வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இதில் தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் `தமிழ் தலைவாஸ்’ அணியின் ஜெர்ஸி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நீலம் மற்றும் மஞ்சள் வண்ணம் கலந்த ஜெர்ஸியைத் தமிழ் தலைவாஸின் நிர்வாக இயக்குநர் சில்வா அறிமுகப்படுத்தினார்.

கபடி

தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பரத் தூதுவராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்ஸியை அணிந்தபடி இந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``கபடி விளையாட்டு நம் வரலாற்றோடும் பாரம்பர்யத்தோடும், பின்னிப்பிணைந்த ஒன்று. தமிழர்களுடைய விளையாட்டான, கபடியை நாம் தான் மேம்படுத்த வேண்டும். இதனால் தமிழ் மொழி மேம்படும். கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கபடிக்கும் கொடுக்க வேண்டும். இந்த வருட புரோ கபடி சீஸனில் தமிழ் தலைவாஸ் அணியின் விளம்பர தூதுவராக இருந்து, இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமையடைகிறேன்” என்றார்.