'சூயஸ் நிறுவனத்துக்கு சாதகமாக இவ்வளவு நாடகமா?' - கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தில் முறைகேடு!

`நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துவருகின்றன; சூயஸ் நிறுவனம் ஆதாயம் பெறுவதற்காகவே முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன' எனக் குற்றம் சாட்டுகிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். 

 கே.பாலகிருஷ்ணன்

செங்கல்பட்டு மாவட்டம் நெமிலியில், நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஒப்பந்ததாரர்களை முடிவுசெய்வதற்காக AECOM என்ற கன்சல்டன்ட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ள 5 பேரும் தகுதியற்றவர்கள் எனக் கூறி நிராகரித்துவிட்டது இந்த கன்சல்டன்ட் நிறுவனம். " இந்த நிலையில், மீண்டும் டெண்டர் கோரும் முறையைத் துவக்குவதே நடப்பில் இருக்கும் முறையாகும்" எனக் கொதிக்கும் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், " கன்சல்டன்ட் நிறுவனத்தின் ஆட்சேபனைகளையும் மீறி சூயஸ் நிறுவனத்தை ஒப்பந்ததாரராகவும், அவர்களுடன் சேர்த்து ஏற்கெனவே சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள கோப்ரா என்கிற நிறுவனமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களில், கோப்ராவின் கேட்புத் தொகை குறைவாக இருந்தாலும் சிபிஐ வழக்கில் சிக்கியுள்ளதால், அதை நிராகரித்து சூயஸ் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தத்தைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள விவரம், தற்போது வெளிவந்திருக்கிறது. 

14 கோடி ரூபாய் கொடுத்து நியமிக்கப்பட்ட கன்சல்டன்ட் நிறுவனத்தின் ஆலோசனைகளைப் புறக்கணித்ததுவிட்டு, இரண்டு ஆண்டுகள் வரை ஒப்பந்தப் புள்ளிகளைத் திறக்காமல் வைத்துள்ளனர். பின்னர், கோப்ரா நிறுவனம் சிபிஐ விசாரணையில் இருப்பது தெரிந்த பிறகும் அதை மறைத்துவிட்டு, அந்த நிறுவனத்தை டெண்டர் போடவைத்து, பின்னர் இறுதிக்கட்டத்தில் நிராகரித்துவிட்டனர். இவையனைத்தும் சூயஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கும் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டவை. மக்களின் நலன்களுக்கு அப்பாற்பட்ட நோக்கத்துக்காக வழங்கப்படுவது என்பது முறைகேடானதாகும். 

எனவே, டெண்டரை இறுதிப்படுத்தும் நடைமுறையைக் கைவிட்டுவிட்டு, தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து, மறு டெண்டரைக் கோர வேண்டும்' எனக் கொதிக்கிறார் பாலகிருஷ்ணன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!