`இதே நிலை நீடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ - அப்போலோவை எச்சரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராகாததற்கு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆறுமுகசாமிஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. நீதி விசாரணைக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தின. உரிய விசாரணை நடத்தி, சந்தேகங்களைப் போக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தார். அதன்படி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி விசாரணை நடத்திவருகிறது. இதன் ஒருபகுதியாக, ஜெயலலிதா சிகிச்சைபெற்ற அப்போலோ மருத்துவமனையில், ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் நேரில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இதுவரை 30-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகாமல் தவிர்த்துவந்துள்ளனர்.

இதற்கு, ஆறுமுகசாமி ஆணையம் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. மேலும், அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனுப்பப்படும் சம்மன் அடிப்படையில், குறித்த நேரத்தில் ஆஜராக வேண்டும் என அப்போலோ நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் ரெட்டிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், `மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த உங்கள் மருத்துவமனை மருத்துவர்கள் சிலரை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதைக் கண்டிக்கிறோம். இதே நிலை நீடித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!