குட்கா வழக்கு - கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

குட்கா வழக்கில் கைதுசெய்யப்பட்ட 5 பேரையும், 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க  சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  25 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையில், 2 பை நிறைய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்நிலையில், ராஜேந்திரன், நந்த குமார் என்ற இடைத்தரகர்கள் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்ததாக, இன்று காலை தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின்பேரில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியான செந்தில் முருகன் மற்றும் மத்திய கலால் வரித் துறை அதிகாரி என்.கே. பாண்டியன் உள்ளிட்ட 5 பேரை அதிரடியாகக் கைதுசெய்தனர். இதையடுத்து, அவர்கள்  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்பு, நீதிபதி திருநீலபிரசாத் முன்னிலையில் அவரது அறையில் விசாரணை நடைபெற்றது. பிறகு, கைது செய்யப்பட்ட 5 பேரையும்  15 நாள் (வரும் 20-ம் தேதி வரை) நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அவர்கள் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர்கள் அளித்த வாக்குமூலத்தை வைத்தே இந்த 5 பேர்மீதும் நடவடிக்கை எடுத்ததாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!