வெளியிடப்பட்ட நேரம்: 21:41 (06/09/2018)

கடைசி தொடர்பு:21:41 (06/09/2018)

'நீட் தேர்வால் எங்களுக்கும் கஷ்டம்!' -கலங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

'தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எழுந்த எதிர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன. மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்நிலையில், நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்கின்றனர், ஆசிரியர் சங்கத்தினர். 

நீட் தேர்வு

தமிழக அரசு, மாணவர்கள் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெறும் வகையில், பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது. அதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நீட் தேர்வை எதிர்கொள்ள அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் திரையில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு விடுமுறை நாள்களில்  பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகள், காலாண்டுத் தேர்வு விடுமுறையில் இருந்து தொடங்க உள்ளது. 

செங்கோட்டையன்இது தொடர்பாக, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் பெருமாள்சாமியிடம் பேசினோம்.  ``தமிழகத்தில், நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களைத் தயார்செய்யும் விதமாக அவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுபோல இல்லாமல் இந்த ஆண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. 

தற்போது அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழகம் முழுவதும் 412 மையங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். ஒரு மையத்துக்கு 12 ஆசிரியர்கள் வீதம் இந்தப் பயிற்சித் திட்டத்துக்கு சுமார் 4,800 ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.  அடுத்த ஆண்டு, நீட் தேர்வுக்கு முன்னர் வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் நடக்கும். மொத்தம் 36 வாரம், விடுமுறை நாள்களில் நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.    

கடந்த மே மாதத்தில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும்பணிக்கு ஈடான விடுமுறையே இன்னும் வழங்காத சூழலில், விடுமுறை நாள்களில் ஆசிரியர்களைப் பயிற்சி வழங்கச்சொன்னால், அவர்களுக்கு ஓய்வு கிடைக்காத சூழல் ஏற்படும். தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு சொல்லித் தரவே தனியாக நாங்கள் தயாராகவேண்டியுள்ளது. இந்த நிலையில், விடுமுறையில் தொடர்ந்து பணிசெய்யும் நிலை ஏற்பட்டால், இரண்டையும் சரிவர செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். எங்களுக்கு அரசுப் பள்ளி குழந்தைகளின் நலன்தான் முக்கியம். ஆனால், இதற்கு மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தலாம். 

இது தொடர்பாக, இயக்குநரிடமும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடமும் பேச தொடர்ந்து முயன்று வருகிறோம், ஆனால் முடியவில்லை. அவர்கள் எங்களை சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். எங்களிடம் ஆலோசிக்காமல் தனியாக முடிவெடுத்துவிட்டு, அதைச் செய்யுமாறு நிர்பந்திக்கிறார்கள். அமைச்சரிடம் பேசினாலும், பார்க்கிறேன் என்கிறார். ஆனால், அதற்கு முடிவு கிடைக்கவில்லை. 

போராட்டம்

ஏற்கெனவே 4000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மேலும் 4000 ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்தினால், பள்ளிப் பாடமும் முழுமையடையாமல், பயிற்சியும் முழுமையடையாமல் இருக்கும். எங்களுக்கு மாணவர்கள் நலன்தான் முக்கியம். இதைச் செய்ய முடியாது என்று சொல்லவில்லை. இதற்காகத் தனியே ஒரு திட்டம் வகுத்து, புதிதாக பணிக்கு ஆள்கள் எடுத்து இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தலாம். அதற்கெல்லாம் முன்னால் எங்களை அழைத்துப் பேச வேண்டும். இது தொடர்பாகத்தான் இன்று கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தினோம். எங்களுக்கு ஆசிரியர்கள் நலன், மாணவர்கள் நலன் மற்றும் சமூக நலன் ஆகிய மூன்றும் முக்கியம். ” என்று விரிவாகப் பேசினார். 

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்வாரா?