`சிலைகளை இப்படிப் போட்டு வச்சிருக்கீங்க!’ - ஶ்ரீரங்கம் கோயிலில் அதிர்ந்த பொன்.மாணிக்கவேல்

நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஶ்ரீரங்கம் கோயிலுக்குள் ஆய்வு நடத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி., பொன்.மாணிக்கவேல்,  ஶ்ரீரங்கம் கோயிலுக்குள் சில இடங்களைப் பார்வையிட்டபோது  அதிர்ச்சியடைந்தார். சுமார் 2 மணி நேர விசாரணை திக் திக் என நகர்ந்தது.

ஶ்ரீரங்கத்தில் பொன்மாணிக்கவேல்

108 திவ்ய தேசங்களில் முதன்மையாக விளங்குகிறது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம். தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து ரங்கநாதரை தரிசித்துச் செல்கிறார்கள்.

 ஸ்ரீரங்கம் கோயிலில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் திருப்பணிகள் நடைபெற்றது. அதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு முதல் இரண்டு கட்டமாக ஶ்ரீரங்கம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோயிலில் திருப்பணிகள் நடந்தபோது சிலைகள் மாயமானது என்றும், ஸ்ரீரங்கம் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும், கோயிலின் மூலவாசல் சேதம் அடைந்துள்ளதாகவும், கோயிலுக்குள் சில சிலைகள் காணாமல் போனதாகவும்,  ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத்  தொடுத்தார். 

அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம்குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, கடந்த ஜூலை 18-ம் தேதி உத்தரவிட்டனர். அதையடுத்து, இன்று தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி., பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பி., ராஜாராம் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்து  விசாரணை நடத்தினர். 

இன்று மதியம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார், சக்கரத்தாழ்வார் சந்நிதி, மூலஸ்தானம், கம்பத்தடி அஞ்சநேயர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள வரதராஜர் சந்நிதி மற்றும் பழைய சிலைகள் பராமரிப்புப் பகுதி உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்

அதை அடுத்து, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், புகார்தாரர் ரெங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீரங்கம் கோயிலின் தலைமை பட்டர் முரளி பட்டர் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார். விசாரணையில், கோயிலின் இணை ஆணையர், கோயில் குருக்கள் மட்டுமல்லாமல் கோயில் ஊழியர்களிடமும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில இடங்களில் சிலைகள் புதியதாகச் செய்திருப்பதைப் பார்த்த ஐஜி., பொன் மாணிக்கவேல், `அந்தச் சிலைகள்  பழைய சிலைபோல, அச்சு அசலாகச் செய்யப்பட்டிருப்பது ஏன்’ எனக் கேட்டார். அதற்கு கோயில் நிர்வாகத்தினர், `அவை மாதிரி சிலைகள்’ எனப் பதிலளிக்க, அதை நம்பாத ஐஜி., இவை மாதிரி சிலையாகத் தெரியவில்லை என சந்தேகத்துடன் தொடர்ந்து கேட்டார். அதையடுத்து, ஆயிரங்கால் மண்டபத்துக்குள் ஓர் அறையில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து பதறியவர், சிலைகளை இப்படிப் போட்டுவச்சிருக்கீங்க... எனக் கேள்வி எழுப்பினார். பராமரிப்பு இல்லாமல்  இருந்த சிலைகளை இங்கு சேகரித்துவைத்துள்ளோம்” என  அதிகாரிகள் கூற, அங்கிருந்து மற்ற பகுதிக்குச் சென்றார்கள்.  

விசாரணை முடிந்து கிளம்பிய கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி., ராஜாராம், "உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, எங்கள் விசாரணையில் 25 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 75 சதவிகிதம் விசாரணையை முடித்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்" என்றார். ஶ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் குழுவாக வந்து விசாரணை நடத்தியது பெரும்பரபரப்பை உண்டாக்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!